கொடியோடு வீழ்ந்து கிடக்கும் யானைகளைக் கூறியது
 

480.சாய்ந்துவிழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து
       தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்
      கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின்.
 
      (பொ-நி.) களிற்றினுடனே  சாய்ந்து,  படியும் கொடிகள் காந்தருடன்
வைகும் கற்புடைய மாதரை ஒத்தல் காண்மின்! (எ-று.)

     
(வி-ம்.)  கடம் - மதம். குருதி - செந்நீர். மிசை - மேலே. கொடிகள்
-அரசர்க்குரிய கொடிகள். காந்தர். கணவர்.  கனல் - தீ.  அமளி - படுக்கை.
வைகுதல்  -  தங்குதல்.   அரசர்   தம்   கொடிகள்   செந்நீரச்  சேற்றில்
வீழ்ந்துகிடக்கும்    தோற்றம்,    கற்புடைமகளிர்    தத்தம்   காதலரோடு
உடன்கட்டையேறிய காட்சிபோன்றிருந்தது.
                                                           (9)