தோற்ற இயல்பு கூறி விளித்தது

49. முறுவல் மாலையொடு தரள மாலைமுக
     மலரின் மீதும்முலை முகிழினும்
சிறுநி லாவும்அதின் மிகுதி லாவும்என
   வருந லீர்கடைகள் திறமினோ.

    (பொ-நி) முறுவல்மாலையொடு   தரளமாலை,   சிறுநிலாவும்   மிகு
நிலாவுமென  வருநலீர்  திறமின்; (எ-று.)

   
(வி-ம்.) முறுவல் மாலை-பல் வரிசை.  தரளம்-முத்து. முகிழ்-மொட்டு.
சிறுநிலா- மூன்றாம் பிறை. மிகுநிலா-நிறை நிலா. என-என்று தோன்றுமாறு.
வரும் - நடந்து  வரும்.  நலீர்  -  நல்லீர்;  பெண்களே.  பல்வரிசையும்,
முத்துமாலையும்,   பிறைநிலாவும்  நிறைநிலாவும்  போன்றன.  பல்வரிசை
சிற்றளவினவாகலான்   அது,   இளம்பிறையின்  ஒளிக்கும்,  முத்துமாலை
வட்டவடிவமாகப்   பெரிதாக   இருத்தலின்,   நிறைநிலாவின்  ஒளிக்கும்
உவமையாக்கி உரைத்தார்.                                    (29)