யானைநிரை கடலணை போன்றமை  

494. புவிபுரந் தருள்செயும் சயதரன் ஒருமுறைப்
       புணரிமெல் அணைபடப் பொருவில்வில் குனிதலின்
கவிகுலம் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக்
      கரிகளின் பிணம்இதிற் காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.)  ஒருமுறை   சயதரன்   வில்    குனிதலின்,   கவிகுலம்
கடலிடைச்சொரி,  பெருங்கிரி  என, இதில்  கரிகளின்  பிணம்  காண்மின் !
(எ-று.)

     (வி-ம்.)  புவி - உலகு.  புரந்து - காத்து:  வினையெச்சம்.  சயதரன்
-குலோத்துங்கன் (ஆகிய திருமால்)  ஒரு  முறை இராமனாய்ப் பிறந்தகாலை.
புணரி -கடல். பட-உண்டாக. பொருவு இல் - ஒப்பற்ற. குனிதல் - வளைதல்.
இராமன் வில்வளைத்துக் கணைதொடுத்த பின்பே வருணன்  பணிந்தமையின்
இங்ஙனம் கூறப்பட்டது, கவி-குரங்கு, கிரி-மலை, கரி-யானை.
                                                           (23)