மனங்கவரும் இயல்பு கூறி விளித்தது

50. முருகிற் சிவந்த கழுநீரும்
     முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
   செம்பொற் கபாடம் திறமினோ.
 
    (பொ-நி)  கழுநீரும்,   இளைஞர்   உயிரும்   திருகிச்   செருகும்
குழன்மடவீர் திறமின்; (எ-று.)


    (வி-ம்.) முருகு - மணம். கழுநீர் - செங்கழுநீர்ப்பூ. திருகி-முறுக்கிப்
பறித்து. குழல் - கூந்தல். கழுநீர் மலரையும் இளைஞர் உயிரையும் தங்கள்
கூந்தலில் வைத்துச் செருகினர் என்க.  இளநங்கையர்  தம்மைப் புனைந்து
கொள்ளற்குக் கழுநீர்ப்பூ முதலியவற்றைப் பறித்துத் தம் கூந்தலிலணிதலும்
அவர்பால்  காதல் கொண்ட காமுக ஆடவர் இவரை நினைந்து நினைந்து
உருகி  உயிர்ப்பாரம்  குறைவராதலால்  இவ்விரண்டுக்கும் ஒப்பத் 'திருகிச்
செருகும் குழல்' என்றார்.                                     (30)