காளி பேய்களைக் கூழடுமாறு மொழிந்தது
 

503.களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று
       கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக்
குளமடைபட் டதுபோலும் குருதி யாடிக்
      கூழடுமின் என்றருளக் கும்பிட் டாங்கே.

     (பொ-நி.) "களம் காட்டுதற்கு  முடிவதன்று;  கரிசொரிய,  குமிழிவிட்டு,
மடைபட்டது  போலும்  குருதி   ஆடி,  கூழ்  அடுமின் "  என்று அருளக்
கும்பிட்டு; (எ-று.)

     (வி-ம்.) அடைய-முழுதும்.   முடிவது    அன்று-முடியாது;  இயலாது.
கவிழும் -இறந்து    வீழ்ந்த.   கரி-யானை.    மடை-நீர்    புகும்   வாய்.
படுதல் -அழிதல்.    குருதி-செந்நீர்.    ஆடுதல்-நீராடுதல்.    கூழ்-உணவு.
அடுதல்-சமைத்தல்.   கும்பிட்டு   பேய்கள்   கும்பிட்டு.   மடை   அழிந்த
குளம்போல்  பெருகியது  குருதி  யென்க.
                                                           (32)