இதுவும் அது

543.தாளிரண்டால் நிலவேந்தர் தலைதாங்கும் சயதுங்கன்
 தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோள் ஆயிரமே.

     (பொ-நி.) தாள்  இரண்டால்   வேந்தர்   தலைதாங்கும்  சயதுங்கன்
தோள்  இரண்டால்  துணித்த  தோள்  ஆயிரம் : (எ-று.)

     (வி-ம்.) தாள் - பாதம்.  தலை  தன்  தாளில்  உறப்படிந்து வேந்தர் வணங்கலால்,  தாள்  வேந்தர்  தலைதாங்கிற் றென்க. வாணன்: ஓர் அசுரன். துணித்த-வெட்டிய.   வாணன்   மகளாகிய  உழை  என்பாள் கண்ணபிரான் பேரனாகிய    அநிருத்தன்    என்பானைக்    களவொழுக்கத்தாற்    கூடி மகிழ்ந்திருந்தனள். வாணன் இதனையறிந்து   அவனைச்  சிறைப்படுத்தினான்.
தன்  பேரனை  மீட்கக்  கருதிய  கண்ணபிரான், வாணனோடு  போர்செய்து
அவன்   ஆயிரம்   தோள்களையும்  துணித்தன  ரென்க.  குலோத்துங்கன்
திருமால்  சாயலெனக்  கொள்ளல்  ஆன்றோர்  முறை ஆகலான், திருமால் செயலை  மன்னனுக்கு  ஏற்றிக்  கூறினார். மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்று தேவர் மறையும் முழங்குவதும் கருதத்தக்கது.      (72)