உணவுகொள்ள நிலம் திருத்தல்
 
557.சோரும் களிற்றின் வாலதியால்
       சுழல அலகிட்டு அலைகுருதி
நீருந் தெளித்துக் கலம்வைக்க
      நிலமே சமைத்துக் கொள்ளீரே.

     (பொ-நி.) களிற்றின் வாலதியால் அலகிட்டு,  குருதிநீரும்  தெளித்து, நிலம்  சமைத்துக்கொள்ளீர்  ! (எ-று.)

     (வி-ம்.) சோர்தல் - (இறந்து)  சோர்ந்து  கிடத்தல்.  வாலதி - வால். அலகிட்டு-பெருக்கி. குருதி-செந்நீர். கலம்- ஏனம்.  சமைத்தல் - ஏற்படுத்தல், இறந்தயானைகளின்   வாலையே   துடைப்பமாகக்   கொண்டு   நிலத்தைத் துப்புரவாக்கி   அவ்விடத்தில்,   குருதிநீரைத்   தெளித்து  உண்கலங்களை
வைக்க இடம் ஏற்படுத்திக் கொள்ளுமாறு பேய் கூறிய தென்க.        (86)