கூடியும் ஊடியும் நின்றநிலை கூறி விளித்தது

70. ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ
     ழிந்து கூடுதலின் உங்களைத்
தேடுவீர் கடைகள் திறமி னோஇனிய
   தெரிவை மீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.) ஊடுவீர்; முனிவு ஒழிந்து கூடுதலின், உங்களைத் தேடுவீர்,
திறமினோ; தெரிவை மீர்திறமினோ; (எ-று.)

     (வி-ம்.) கொழுநர் - கணவர். முனிவு - ஊடல்; கூடுதல் - புணர்தல்.
உங்களைத்தேடுவீர் - உங்களை மறந்திருப்பீர் என்றபடி. அஃதாவது காதல்
மயக்கத்தால்  தம்மைத்தாமே  மறந்து காதல் வயப்பட்டிருத்தல். இதனைத்,
‘தன்னையும் துறக்கும்  தன்மை காமத்தே தங்கிற் றன்றே’' என்னும் கம்பர
மொழியானும் அறிக. தெரிவை-பெண்.                           (50)