புறாத் தென்படல் கூறியது

82. செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார்
     செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்பு
அந்நெ ருப்பினில் புகைதி ரண்டதொப்பு
   அல்லது ஒப்புறா அதனி டைப்புறா.

     (பொ-நி.)   தரைப்பரப்பு. நெருப்பினைத்  தகடுசெய்துபார்  செய்த
தொக்கும்; அதனிடைப் புறா, புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா;
(எ-று.)

     (வி-ம்.) செம்தரை - செந்நிறமுள்ள பாலை நிலம். பரப்பு-விரிவான
இடம். பார்-பூமி. ஒப்பு-ஒப்புதல்.  உறா-பொருந்தாது. திரண்ட புகையன்றி
வேறு  ஒப்பு  இல்லை  என்க.  தரைப்பரப்பு  நெருப்பினைப் போன்றும்
அந்நிலத்தில்   பறக்கும்   புறாக்கள்   புகைத்திரட்சியைப்   போன்றும் விளங்கினவென்க.                                           (8)