12

முப்பத்துமூவர்
(வேறு)

அமரில் வெந்இடும்அவ் உதியர் பின்இடும்ஒர்
                அபயர் முன்னிடுவ னத்துஒக்க ஓடவும்
        அளவும் எம்முடைய திறைஇது என்னமுடி
                அரசுர் எண்ணிலர்ஒர் முற்றத்து வாடவும்
        அகில மன்னர்அவர் திசையின் மன்னர்இவர்
                அமரர் என்னும்உரை திக்கொட்டும் மூடவும்
        அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி
                அலரி அண்ணல்முழு வெப்பத்து மூழ்கவும்

குமரி பொன்னிவைகை பொருநை நன்நதிகள்
                குதிகொள் விண்நதியின் மிக்குக் குலாவவும்
        குவடு தென்மலையின் நிகர தின்மைசுரர்
                குடிகொள் பொன்மலை துதித்துப் பராவவும்
        குமரர் முன்இருவர் அமரர் அன்னைஇவள்
                குமரி இன்னமும் எனச்சித்தர் பாடவும்
        குரவை விம்ம அர மகளிர் மண்ணில்எழில்
                குலவு கன்னியர்கள் கைக்கொக்க ஆடவும்

கமலன் முன்னிவிடும் அரச அன்னம்எழு
                கடலில் அன்னமுடன் நட்புக்கை கூடவும்
        கரிய செம்மலொடும் இளைய செம்மல்விடு
                கருடன் மஞ்ஞையொடுஒர் கட்சிக்குள் ஊடவும்
        கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
                களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவும்
        கனக மன்னுதட நளினி துன்னிஇரு
                கமல மின்னும்ஒரு பத்மத்துள் மேலவும்

இமயம் என்ன மனுமுறைகொள் தென்னரும்எம்
                இறையை நன்மருகு எனப்பெற்று வாழவும்
        எவர்கொல் பண்ணவர்கள் எவர்கொல் மண்ணவர்கள்
                எதுகொல் பொன்உலகு எனத்தட்டு மாறவும்
        எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொடு
                எழுமென் அம்மனை வனப்புக்குஒர் காவலர்
        இருவர் எண்மர்பதின் ஒருவர் பன்னிருவர்
                 எனும்அவ்விண்ணவர்கள் முப்பத்து மூவரே
உரை