உள்நிலா உவகைப் பெருங்களி துளும்பநின்று உன்திருத் தாதைநின்னை ஒருமுறை கரம்பொத்தி வருகஎன அழைத்திடுமுன் ஓடித் தவழ்ந்துசென்று தண்உலாம் மழலைப் பசுங்குதலை அமுதினிய தாய்வயிறு குளிரஊட்டித் தடமார்ப நிறை குங்குமச்சேறு அளைந்துபொன் தாள்தோய் தடக்கைபற்றிப் பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும் பணைத்தோள் எருத்தம்ஏறிப் பாசுஒளிய மரகதத் திருமேனி பச்சைப் பசுங்கதிர் ததும்பமணிவாய்த் தெள்நிலா விரியநின்று ஆடும் பசுந்தோகை செங்கீரை ஆடிஅருளே தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி செங்கீரை ஆடிஅருளே |