மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு மழகதிர்க் கற்றைசுற்றும் வாள்நயன மூன்றும் குளிர்ந்துஅமுத கலைதலை மடுப்பக் கடைக்கண்நோக்கும் பொங்கும் நோக்கில் பிறந்த ஆனந்தப் புதுப்புணரி நீத்தம்ஐயன் புந்தித் தடத்தினை நிரப்பவழி அடியர்பால் போகசாகரம்அடுப்ப அங்கண்நெடு ஞாலத்து வித்துஇன்றி வித்திய அனைத்து உயிர்களும் தளிர்ப்ப அருள்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடுத்து அலைஎறிந்து உகளஉகளும் செங்கயல் கிடக்கும் கருங்கண் பசுந்தோகை செங்கீரை ஆடிஅருளே தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி செங்கீரை ஆடிஅருளே |