2

திருமால்

மணிகொண்ட நெடுநேமி வலயம் சுமந்துஆற்று
                மாசுணச் சூட்டுமோட்டு
        மால்களிறு பிடர்வைத்த வளர்ஒளி விமானத்து
                வால்உளை மடங்கல்தாங்கும்

அணிகொண்ட பீடிகையின் அம்பொன்முடி முடிவைத்துஎம்
                ஐயனொடு வீற்றிருந்த
        அங்கயல் கண்அமுதை மங்கையர்க்கு அரசியைஎம்
                அம்மனையை இனிதுகாக்க

கணிகொண்ட தண்துழாய்க் காடுஅலைத்து ஓடுதேம்
                கலுழிபாய்ந்து அளறுசெய்யக்
        கழனிபடு நடவையில் கமலத்து அணங்குஅரசொர்
                கைஅணை முகந்துசெல்லப்

பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
                பணைத்தோள் எருத்துஅலைப்பப்
        பழமறைகள் முறைஇடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
                பச்சைப் பசும்கொண்டலே
உரை