தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்பத் தீஅரும்பும் தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ் செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்நின்று இழிபால்அருவி உவட்டுஎறிய எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப் பொன்னம் கமலப் பசுந்தோட்டுப் பொன்தாது ஆடிக் கற்றைநிலாப் பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த பொன்போல் தொடுதோல் அடிப்பொலன்சூட்டு அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |