ஊறும் கரடக் கடத்துமுகந்து ஊற்றும் மதமா மடவியர்நின் உதறும் குழல்பூந்துகள்டங்க ஓட விடுத்த குங்குமச்செஞ் சேறு வழுக்கி ஓட்டுஅறுக்கும் திருமா மறுகில் அரசர்பெரும் திண்தேர் ஒதுங்கக் கொடுஞ்சிநெடும் சிறுதேர் உருட்டும் செங்கண்மழ ஏறு பொருவேல் இளைஞர்கடவு இவுளி கடைவாய் குதட்டவழிந்து இழியும் விலாழி குமிழிஎறிந்து இரைத்துத் திரைத்து நுரைத்தொருபே ராறு மடுக்கும் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |