தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே நறைபழுத்த துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும் சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருஉள் ளத்தில்அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர்ஓ வியமே மதுகரம்வாய் மடுக்கும் குழல்காடு ஏந்தும்இள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே |