62
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல்
                பிடியே வருக முழுஞானப்
        பெருக்கே வருக பிறைமௌலிப்
                பெம்மான் முக்கண் சுடர்க்குஇடுநல்

விருந்தே வருக மும்முதற்கும்
                வித்தே வருக வித்துஇன்றி
        விளைக்கும் பரம ஆனந்தத்தின்
                விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக அருள்பழுத்த
                கொம்பே வருக திருக்கடைக்கண்
        கொழித்த கருணைப் பெருவெள்ளம்
                குடைவார் பிறவிப் பெரும்பிணிக்குஓர்

மருந்தே வருக பசுங்குதலை
                மழலைக் கிளியே வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை