திங்கள் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச் செருகுதிரு மணவாளன்மேல் செழுமணப் பந்தரில் எடுத்துஎறியும் அமுதவெண் திரளையில் புரளும்அறுகால் பைங்கண் சுரும்புஎன விசும்பில் படர்ந்துஎழும் பனிமதி மிசைத்தாவிடும் பருவமட மான்எனஎன் அம்மனைநின் அம்மனைப் படைவிழிக் கயல்பாய்ந்துஎழ வெங்கண் கடுங்கொலைய வேழக்கு ழாம் இதுஎன மேகக் குழாத்தைமுட்டி விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை விண்டஅம் பைந்துகோத்த அங்கண் கரும்புஏந்தும் அபிடேக வல்லிதிரு அம்மானை ஆடியருளே ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண் அம்மானை ஆடியருளே |