காப்புப்பருவம்
 
2

திருமால்

மணிகொண்ட நெடுநேமி வலயம் சுமந்துஆற்று
                மாசுணச் சூட்டுமோட்டு
        மால்களிறு பிடர்வைத்த வளர்ஒளி விமானத்து
                வால்உளை மடங்கல்தாங்கும்

அணிகொண்ட பீடிகையின் அம்பொன்முடி முடிவைத்துஎம்
                ஐயனொடு வீற்றிருந்த
        அங்கயல் கண்அமுதை மங்கையர்க்கு அரசியைஎம்
                அம்மனையை இனிதுகாக்க

கணிகொண்ட தண்துழாய்க் காடுஅலைத்து ஓடுதேம்
                கலுழிபாய்ந்து அளறுசெய்யக்
        கழனிபடு நடவையில் கமலத்து அணங்குஅரசொர்
                கைஅணை முகந்துசெல்லப்

பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
                பணைத்தோள் எருத்துஅலைப்பப்
        பழமறைகள் முறைஇடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
                பச்சைப் பசும்கொண்டலே
உரை
   
3

சிவபெருமான்
(வேறு)

சிகர வடவரை குனிய நிமிர்தரு
                செருவில் ஒருபொரு வில்எனக் கோட்டினர்
        செடிகொள் பறிதலை அமணர் எதிர்எதிர்
                செலவொர் மதலைசொல் வைகையிற் கூட்டினர்
        திருவும் இமையவர் தருவும் அரவொலி
                செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர்
        சிறிய எனதுபுன் மொழியும் வடிதமிழ்
                தெரியும் அவர்முது சொல்எனச் சூட்டினர்

பகரும் இசைதிசை பரவ இருவர்கள்
                பயிலும் இயல்தெரி வெள்வளைத் தோட்டினர்
        பசிய அறுகொடு வெளிய நிலவிரி
                பவள வனம்அடர் பல்சடைக் காட்டினர்
        பதும முதல்வனும் எழுத அரியதொர்
                பனுவல் எழுதிய வைதிகப் பாட்டினர்
        பரசும் இரசத சபையில் நடமிடு
                பரத பதயுகம் உள்ளம்வைத்து ஏத்துதும்

தகரம் ஒழுகிய குழலும் நிலஉமிழ்
                தரள நகையும்எம் ஐயனைப் பார்த்துஎதிர்
        சருவி அமர்பொரு விழியும் மறுகிடை
                தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன
        தனமும் மன் உற எழுதி எழுதரு
                தமது வடிவையும் எள்ளிமட்டு ஊற்றிய
        தவள மலர்வரும் இளமின் ஒடுசத
                தளமின் வழிபடு தையலைத் தூத்திரை

மகரம் எறிகடல் அமுதை அமுதுஉகு
                மழலை பழகிய கிள்ளையைப் பேட்டன
        மடவ நடைபயில் பிடியை விரைசெறி
                வரைசெய் புயமிசை வையம்வைத்து ஆற்றிய
        வழுதி உடையகண் மணியொடு உலவுபெண்
                மணியை அணிதிகழ் செல்வியைத் தேக்கமழ்
        மதுரை ஒழுகிய தமிழின் இயல்பயில்
                மதுரை மரகத வல்லியைக் காக்கவே
உரை
   
4

சித்திவிநாயகக்கடவுள்
(வேறு)

கைத்தல மோடுஇரு கரடக் கரைத்திரை
                கக்குக டாமுடைக் கடலில் குளித்துஎமர்
        சித்தம தாம்ஒரு தறியில் துவக்குறு
                சித்தி விநாயகன் இசையைப் பழிச்சுதும்
        புத்தமு தோஅருள் தழையத் தழைத்ததொர்
                கொடி யோஎன மதுரித்து உவட்டெழு
        முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்துஉறை
                மேவுபெண் அரசைப் புரக்கவே
உரை
   
5

முருகக்கடவுள்
(வேறு)

பமரம் அடுப்பக் கடாம்எடுத்து ஊற்றும்ஓர்
                பகடு நடத்திப் புலோமசைச் சூற்புயல்
        பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
                பரவை இடைப்பத்ம மாதுஎனத் தோற்றிய

குமரி இருக்கக் கலாமயில் கூத்துஅயர்
                குளிர்புனம் மொய்த்திட் டசாரலில் போய்ச்சிறு
        குறவர் மகள்குச் சலாமிடல்கு ஏக்கறு
                குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்

இமிழ்திரை முற்றத் துமேருமத்து ஆர்த்துமுள்
                எயிறுகு நச்சுப் பணாடவித் தாப்பிசைத்து
        இறுக இறுக்கித் துழாய்முடித் தீர்த்தனொடு
                எவரும் மதித்துப் பராபவத் தீச்சுட

அமுதுசெய் வித்திட் ட போனகத் தால்சுடர்
                அடரும் இருட்டுக் கிரீவமட்டு ஆக்கிய
        அழகிய சொக்கற்கு மால்செயத் தோட்டுஇகல்
                அமர்செய் கயல்கண் குமாரியைக் காக்கவே
உரை
   
6

பிரமதேவர்
(வேறு)

மேகப் பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும்
                விண்புலம் விருந்து அரவும்
        வெள்ளமுதம் வீசும் கருந்திரைப் பைந்துகில்
                விரித்துஉடுத்து உத்தி விரியும்

நாகத்து மீச்சுடிகை நடுவண் கிடந்தமட
                நங்கையைப் பெற்று மற்றுஅந்
        நாகனைத் துஞ்சுதன் தந்தைக்கு வந்துஉதவு
                நளினக் குழந்தை காக்க

பாகத்து மரகதக் குன்றுஒன்றுஓர் தமனியக்
                குன்றொடு கிளைத்து நின்ற
        பவளத் தடங்குன்று உளக்கண்ணது என்றப்
                பரஞ்சுடர் முடிக்கு முடிமூன்று

ஆகத்து அமைத்துப்பின் ஒருமுடிதன் முடிவைத்து
                அணங்கு அரசு வீற்றி ருக்கும்
        அபிடேக வல்லியை அளிக்குலம் முழக்குகுழல்
                அங்கயற் கண் அமுதையே
உரை
   
7

தேவேந்திரன்
(வேறு)

சுழியும் கருங்கண் குண்டுஅகழி சுவற்றும்
                சுடர்வேல் கிரிதிரித்த
        தோன்றற்கு அளித்துச் சுறஉயர்த்த சொக்கப்
                பெருமான் செக்கர்முடி

பொழியும் தரங்கக் கங்கைவிரைப் புனல்கால்
                பாய்ச்சத் தழைந்துவிரி
        புவனம் தனிப்பூத்து அருள்பழுத்த பொன்னங்
                கொடியைப் புரக்கவழிந்து

இழியும் துணர்க் கற்பகத்தின்நறவு இதழ்த்தேன்
                குடித்துக் குமட்டிஎதிர்
        எடுக்குஉ சிறைவண்டு உவட்டுஉறடுண் இரைக்கக்
                கரைக்கும் மதக்கலுழிக்

குழியும் சிறுகண் ஏற்றுஉருமுக் குரல்வெண்
                புயலும் கரும்புயலும்
        குன்றம் குலைய உகைத்துஏறும் குலிசத்
                தடக்கைப் புத்தேளே
உரை
   
8

திருமகள்
(வேறு)

வெஞ்சூட்டு நெட்டுஉடல் விரிக்கும் படப்பாயல்
                மீமிசைத் துஞ்சும் நீல
        மேகத்தின் ஆகத்து விடுசுடர்ப் படலைமணி
                மென்பரல் உறுத்த நொந்து

பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெங்கதிர்ப்
                படும்இள வெயிற்கு உடைந்தும்
        பைந்துழாய்க் காடுவிரி தண்நிழல் ஒதுங்கும்ஒர்
                பசுங்கொடியை அஞ்ச லிப்பாம்

மஞ்சூட்ட கட்டுநெடு வான்முகடு துருவும்ஒரு
                மறைஓ திமம்ச லிக்க
        மறிதிரைச் சிறைவிரியும் ஆயிர முகக்கடவுள்
                மந்தா கினிப்பெ யர்த்த

செஞ்சூட்டு வெள்ஓ திமம்குடி இருக்கும்வளர்
                செஞ்சடைக் கருமி டற்றுத்
        தேவுக்கு முன்நின்ற தெய்வத்தை மும்முலைத்
                திருவைப் புரக்க என்றே
உரை
   
9

கலைமகள்

வெள்ளித் தகட்டுநெட்டு ஏடுஅவிழ்த்து இன்னிசை
                விரும்பும் சுரும்பர் பாட
        விளைநறவு கக்கம் பொலன்பொகுட்டு அலர்கமல
                வீட்டுக் கொழித்து எடுத்துத்

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடலின் அன்பின்ஐந்
                திணைஎன எடுத்த இறைநூல்
        தெள்ளமுது கூட்டுஉணுமோர் வெள்ஓதி மத்தின்இரு
                சீறடி முடிப்பம் வளர்பைங்

கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை ஒழுகுதீங்
                கிளவியும் களிம யிற்குக்
        கிளர்இளஞ் சாயலும் நல்விக்கு நோக்கும்விரி
                கிஞ்சுகச் சூட்டு அரசுஅனப்

பிள்ளைக்கு மடநடையும் உடன்ஆடு மகளிர்க்குஒர்
                பேதைமையும் உதவி முதிராப்
        பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும்ஒரு பாண்டிப்
                பிராட்டியைக் காக்க என்றே
உரை
   
10

துர்க்கை

வடிபட்ட முக்குடுமி வடிவேல் திரித்திட்டு
                வளைகருங் கோட்டு மோட்டு
        மகிடம் கவிழ்த்துக் கடாம்கவிழ்க்கும்சிறுகண்
                மால்யானை வீங்க வாங்கும்

துடிபட்ட கொடிநுண் நுசுப்பிற்கு உடைந்து எனச்
                சுடுகடைக் கனலி தூண்டும்
        சுழல்கண் முடங்குளை மடங்கலை உகைத்துஏறு
                சூர்அரிப் பிணவு காக்க

பிடிபட்ட மடநடைக்கு ஏக்கற்ற கூந்தல்
                பிடிக்குழாம் சுற்ற ஒற்றைப்
        பிறைமருப்பு உடையதொர் களிற்றினைப் பெற்றுஎந்தை
                பிட்டுண்டு கட்டுண்டுநின்று

அடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட
                அணிமணிக் கிம்பு ரிக்கோடு
        ஆகத்த தாகக் கடம்பாடு அவிக்குள்விளை
                யாடுமொர் மடப்பிடியையே
உரை
   
11

சத்தமாதர்கள்
(வேறு)

கடகளிறு உதவுக பாய்மிசைப் போர்த்தவள்
                கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
        கடல்வயிறு எரியஒள் வேலினைப் பார்த்தவள்
                கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்

இடியுக அடல் அரி ஏறுஉகைத்து ஆர்த்தவள்
                எழுதரும் முழுமறை நூலினில் கூர்த்தவள்
        எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
                எனும்இவர் எழுவர்கள் தாள்முடிச் சூட்டுதும்

குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
                குரவையும் அலதுஒர் பணாமுடிச் சூட்டருள்
        குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்பஒர்
                குழலிசை பழகளி பாடிடக் கேட்டுஉடை

மடல்அவிழ் துளப நறாஎடுத்து ஊற்றிட
                மழகளிறு எனஎழு கார்முகச் சூல்புயல்
        வரவரும் இளைய குமாரியைக் கோட்டுஎயில்
                மதுரையில் வளர் கவுமாரியைக் காக்கவே
உரை
   
12

முப்பத்துமூவர்
(வேறு)

அமரில் வெந்இடும்அவ் உதியர் பின்இடும்ஒர்
                அபயர் முன்னிடுவ னத்துஒக்க ஓடவும்
        அளவும் எம்முடைய திறைஇது என்னமுடி
                அரசுர் எண்ணிலர்ஒர் முற்றத்து வாடவும்
        அகில மன்னர்அவர் திசையின் மன்னர்இவர்
                அமரர் என்னும்உரை திக்கொட்டும் மூடவும்
        அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி
                அலரி அண்ணல்முழு வெப்பத்து மூழ்கவும்

குமரி பொன்னிவைகை பொருநை நன்நதிகள்
                குதிகொள் விண்நதியின் மிக்குக் குலாவவும்
        குவடு தென்மலையின் நிகர தின்மைசுரர்
                குடிகொள் பொன்மலை துதித்துப் பராவவும்
        குமரர் முன்இருவர் அமரர் அன்னைஇவள்
                குமரி இன்னமும் எனச்சித்தர் பாடவும்
        குரவை விம்ம அர மகளிர் மண்ணில்எழில்
                குலவு கன்னியர்கள் கைக்கொக்க ஆடவும்

கமலன் முன்னிவிடும் அரச அன்னம்எழு
                கடலில் அன்னமுடன் நட்புக்கை கூடவும்
        கரிய செம்மலொடும் இளைய செம்மல்விடு
                கருடன் மஞ்ஞையொடுஒர் கட்சிக்குள் ஊடவும்
        கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
                களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவும்
        கனக மன்னுதட நளினி துன்னிஇரு
                கமல மின்னும்ஒரு பத்மத்துள் மேலவும்

இமயம் என்ன மனுமுறைகொள் தென்னரும்எம்
                இறையை நன்மருகு எனப்பெற்று வாழவும்
        எவர்கொல் பண்ணவர்கள் எவர்கொல் மண்ணவர்கள்
                எதுகொல் பொன்உலகு எனத்தட்டு மாறவும்
        எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொடு
                எழுமென் அம்மனை வனப்புக்குஒர் காவலர்
        இருவர் எண்மர்பதின் ஒருவர் பன்னிருவர்
                 எனும்அவ்விண்ணவர்கள் முப்பத்து மூவரே
உரை