வருகைப்பருவம்
 
53
அஞ்சிலம்பு ஓலிட அரிக்குரல் கிண்கிணி
                அரற்றுசெஞ் சீறடிபெயர்த்து
        அடிஇடும் தொறும்நின் அலத்தகச் சுவடுபட்டு
                அம்புவி அரம்பையர்கள் தம்

மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தைமுடி
                வளர்இளம் பிறையும்நாற
        மணிநூ புரத்துஅவிழும் மென்குரற் கோஅசையும்
                மடநடைக் கோதொடர்ந்துஉன்

செஞ்சிலம்பு அடிபற்று தெய்வக் குழாத்தினொடு
                சிறைஓதி மம்பின்செலச்
        சிற்றிடைக்கு ஒல்கிமணி மேகலை இரங்கத்
                திருக்கோயில் எனஎன்நெஞ்சக்

கஞ்சமும் செஞ்சொல் தமிழ்க்கூட லும்கொண்ட
                காமர்பூங் கொடிவருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அவிர்பொலி
                கயல்கண்நா யகிவருகவே
உரை
   
54
குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங்
                கோதையும் மதுரம்ஒழுகும்
        கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக்
                கூந்தல்அம் பிடியும் அறுகால்

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ
                மணங்கமழ விண்டதொண்டர்
        மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட
                மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல
                தொல்உரு எடுத்துஅமர்செயும்
        தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந்
                துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல்
                கலாபமா மயில்வருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி
                கயல்கண்நா யகிவருகவே
உரை
   
55
முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்
                முள்பொதி குடக்கனியொடு
        முடவுத் தடம்தாழை முப்புடைக் கனிசிந்த
                மோதிநீர் உண்டுஇருண்ட

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்கள் அன்றிஏழ்
                பொழிலையும் ஒருங்குஅலைத்துப்
        புறம்மூடும் அண்டச் சுவர்த்தலம் இடித்துஅப்
                புறக்கடல் மடுத்துஉழக்கிச்

செயல்பாய் கடல்தானை செங்களம் கொள அம்மை
                திக்குவிச யம்கொண்டநாள்
        தெய்வக் கயல்கொடிகள் திசைதிசை எடுத்துஎனத்
                திக்குஎட்டும் முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை
                காவலன் மகள் வருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி
                கயல்கண்நா யகிவருகவே.

உரை
   
56
வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு
                மதுரஅமு துண்டுகடைவாய்
        வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி
                மருப்பில் பொருப்புஇடித்துத்

தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத்
                தலத்துஅணிவது ஒப்பஅப்பிச்
        சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின்
                தானநீ ரால்நிரப்பி

முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன
                முகடுகை தடவிஉடுமீன்
        முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு
                முகில்படாம் நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங்
                களிறுஈன்ற பிடிவருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி
                கயல்கண்நா யகிவருகவே
உரை
   
57
தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு
                செம்பஞ்சி யின்குழம்பால்
        தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்
                செக்கர்மதி யாக்கரைபொரும்

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
                வாணிநதி யாச்சிவபிரான்
        மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு
                மரகதக் கொம்புகதிர்கால்

மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்
                வேழத்தின் மத்தகத்து
        வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு
                வெண்கவரி வீசும்வாசக்

கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்
                கவுரியன் மகள்வருகவே
        கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி
                கயல்கண்நா யகிவருகவே
உரை
   
58

(வேறு)

வடக்குங் குமக்குன்று இரண்டுஏந்தும்
                வண்டல் மகளிர் சிறுமுற்றில்
        வாரிக் குவித்த மணிக்குப்பை
                வான்ஆறு அடைப்ப வழிபிழைத்து

நடக்கும் கதிர்பொன் பரிசிலா
                நகுவெண் பிறைகைத் தோணியதா
        நாள்மீன் பரப்புச் சிறுமிதப்பா
                நாப்பண் மிதப்ப நால்கோட்டுக்

கடக்குஞ் சரத்தின் மதநதியும்
                கங்கா நதியும் எதிர்கொள்ளக்
        ககன வெளியும் கற்பகப்பூங்
                காடும் கடந்து கடல்சுருங்க

மடுக்கும் திரைத்தண் துறைவைகை
                வளநாட்டு் அரசே வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை
   
59
சுண்ணம் திமிர்ந்து தேனருவி
                துளைந்தாடு அறுகால் தும்பிபசும
்         தோட்டுக் கதவம் திறப்பமலர்த்
                தோகை குடிபுக்கு ஓகைசெயும்

தண்ணம் கமலக் கோயில்பல
                சமைத்த மருதத் தச்சன்முழு
        தாற்றுக் கமுகு நாற்றிஇடும்
                தடங்கா வணப்பந்த ரில்வீக்கும்

விண்ணம் பொதிந்த மேகபடாம்
                மிசைத்தூக் கியபன் மணிக்கொத்து
        விரிந்தால் எனக்கால் நிமிர்ந்துதலை
                விரியும் குலைநெல் கற்றைபல

வண்ணம் பொலியும் பண்ணைவயல்
                மதுரைக்கு அரசே வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை
   
60
தகரக் குழலின் நறையும்நறை
                தருதீம் புகையும் திசைக்களிற்றின்
        தடக்கை நாசிப் புழைமடுப்பத்
                தளரும் சிறு நுண் மருங்குல்பெரும்

சிகரக் களபப் பொம்மல்முலைத்
                தெய்வ மகளிர் புடைஇரட்டும்
        செங்கைக் கவரி முகந்துஎறியும்
                சிறுகால்கு ஒசிந்து குடிவாங்க

முகரக் களிவண்டு அடைகிடக்கும்
                முளரிக் கொடிக்கும் கலைக்கொடிக்கும்
        முருந்து முறுவல் விருந்திடுபுன்
                மூரல் நெடுவெண்ணிலவுஎறிப்ப

மகரக் கருங்கண் செங்கனிவாய்
                மடமான் கன்று வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை
   
61
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
                தொடையின் பயனே நறைபழுத்த
        துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும்
                சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
                ஏற்றும் விளக்கே வளர்சிமய
        இமயப் பொருப்பில் விளையாடும்
                இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்துநின்ற
                ஒருவன் திருஉள் ளத்தில்அழகு
        ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
                உயிர்ஓ வியமே மதுகரம்வாய்

மடுக்கும் குழல்காடு ஏந்தும்இள
                வஞ்சிக் கொடியே வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை
   
62
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல்
                பிடியே வருக முழுஞானப்
        பெருக்கே வருக பிறைமௌலிப்
                பெம்மான் முக்கண் சுடர்க்குஇடுநல்

விருந்தே வருக மும்முதற்கும்
                வித்தே வருக வித்துஇன்றி
        விளைக்கும் பரம ஆனந்தத்தின்
                விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக அருள்பழுத்த
                கொம்பே வருக திருக்கடைக்கண்
        கொழித்த கருணைப் பெருவெள்ளம்
                குடைவார் பிறவிப் பெரும்பிணிக்குஓர்

மருந்தே வருக பசுங்குதலை
                மழலைக் கிளியே வருகவே
        மலயத் துவசன் பெற்றபெரு
                வாழ்வே வருக வருகவே
உரை