அம்புலிப்பருவம்
 
63
கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்குஒரு
                கலாபேதம் என்னநின்னைக்
        கலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதுஒண்
                கலாநிதி எனத்தெரிந்தோ

வண்டுபடு தெரியல் திருத்தாதை யார்மரபின்
                வழிமுதல் எனக்குறித்தோ
        வளர்சடைமுடிக்குஎந்தை தண்நறும் கண்ணியா
                வைத்தது கடைப்பிடித்தோ

குண்டுபடு பால்கடல் வரும்திருச் சேடியொடு
                கூடப் பிறந்துஓர்ந்தோ
        கோமாட்டி இவள்நின்னை வம்எனக் கொம்எனக்
                கூவிடப் பெற்றாய்உனக்கு

அண்டுபடு சீர்இதுஅன் றுஆதலால் இவளுடன்
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே
உரை
   
64
குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந்து ஊற்றிக்
                குடித்துச் சுவைத்துஉமிழ்ந்த
        கோதுஎன்றும் அழல்விடம் கொப்பளிக் கின்றஇரு
                கோளின்உச் சிட்டம்என்றும்

கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
                கயரோகி என்றும் ஒருநாள்
        கண்கொண்டு பார்க்கவும் கடவதுஅன்று எனவும்
                கடல்புவி எடுத்துஇகழவிண்

புலத்தோடும் உடுமீன் கணத்தோடும் ஓடும்நின
்                 போல்வார்க்கு மாபாதகம்
        போக்கும்இத் தலம்அலது புகல்இல்லை காண்மிசைப்
                பொங்குபுனல் கற்பகக்காடு

அலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொடு
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே
உரை
   
65
கீற்றுமதி எனநிலவு தோற்றுபரு வத்தில்ஒளி
                கிளர்நுதல் செவ்விவவ்விக்
        கெண்டைத் தடங்கணார் எருவிட்டு இறைஞ்சக்
                கிடந்ததும் உடைந்துஅமுதம்விண்டு

ஊற்றுபுது வெண்கலை உடுத்துமுழு மதிஎன
                உதித்தஅமை யத்தும் அம்மை
        ஒண்முகத்து ஒழுகுதிரு அழகைக் கவர்ந்துகொண்டு
                ஓடினது நிற்கமற்றை

மாற்றவ ளொடும்கேள்வர் மௌலியில் உறைந்ததும்
                மறந்துஉனை அழைத்தபொழுதே
        மற்றுஇவள் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ
                மண்முழுதும் விம்முபுயம்வைத்து

ஆற்றுமுடி அரசுஉதவும் அரசுஇளங் குமரியுடன்
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே
உரை
   
66
விண்தலம் பொலியப் பொலிந்திடுதி யேல்உனது
                வெம்பணிப் பகைவிழுங்கி
        விக்கிடக் கக்கிடத் தொக்குஇடர்ப் படுதிவெயில்
                விரியும் சுடர்ப்பரிதியின்

மண்டலம் புக்கனை இருத்திஎனின் ஒள்ஒளி
                மழுங்கிட அழுங்கிடுதிபொன்
        வளர்சடைக் காட்டுஎந்தை வைத்திடப் பெறுதியேல்
                மாசுணம் சுற்றஅச்சம்

கொண்டுகண் துஞ்சாது இருப்பதும் மருப்பொங்கு
                கோதைஇவள் சீறடிகள்நின்
        குடர்குழம் பிடவே குமைப்பதும் பெறுதியேல்
                கோமாட்டி பால்அடைந்தால்

அண்டபகி ரண்டமும் அகண்டமும் பெறுதியால்
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே

உரை
   
67
எண்ணில்பல புவனப் பெருந்தட்டை ஊடுருவி
                இவள்பெரும் புகழ்நெடுநிலா
        எங்கணும் நிறைந்திடுவது அங்குஅதனின் மெள்ளநீ
                எவ்வளவு மொண்டுகொண்டு

வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்துஇவள்
                விழிக்கடை கொழித்தகருணை
        வெள்ளம் திளைத்துஆடு பெற்றியால் தண்அளி
                விளைப்பதும் பெற்றனைகொலாம்

மண்ணில்ஒண் பைங்கூழ் வளர்ப்பதும் இடத்துஅம்மை
                வைத்திடும் சத்தியேகாண்
        மற்றுஒரு சுதந்தரம் நினக்குஎன இலைக்கலை
                மதிக்கடவுள் நீயும்உணர்வாய்

அண்ணல்அம் களியானை அரசர்கோ மகளுடன்
                அம்புலீ ஆடவாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆடவாவே
உரை
   
68
முன்புஉம்பர் அரசுசெய் பெரும்பாவ மும்போக
                மூரிமாத் தொடர்சா பமும்
        மும்மைத் தமிழ்ச்செழியன் வெப்பொடு கொடுங்கூனும்
                மோசித்த இத்த லத்தின்

தன்பெருந் தன்மையை உணர்ந்திலைகொல் சிவராச
                தானியாய்ச் சீவன் முத்தித்
        தலமுமாய்த் துவாதசாந் தத்தலமும் ஆனதுஇத்
                தலம்இத் தலத்து அடைதியேல்

மன்பெருங் குரவன் பிழைத்தபா வமும்மற்றை
                மாமடிகள் இடுசா பமும்
        வளர்இளம் பருவத்து நரைதிரையும் முதிர்கூனும்
                மாற்றிடப் பெறுதி கண்டாய்

அன்பர்என்பு உருகக் கசிந்திடு பசுந்தேனொடு
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை
   
69
கும்பம் சுமந்தமத வெள்ளநீர் கொட்டும்
                கொடுங்களிறு இடும்போர் வையான்
        குடிலகோ டீரத்து இருந்துகொண்டு அந்நலார்
                கொய்தளிர்க் கைவ ருடவும்

செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆரழல்
                சிகைஎனக் கொப்ப ளிக்கும்
        சீறடிகள் கன்றிச் சிவந்திடச் செய்வதும்
                திருவுளத்து அடையா துபொன்

தம்பம் சுமந்துஈன்ற மானுட விலங்கின்
                தனிப்புதல்வ னுக்கு வட்டத்
        தண்குடை நிழற்றுநினை வம்என அழைத்தனள்
                தழைத்திடு கழைக்க ரும்புஒன்று

அம்புஅஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொடு
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை
   
70
துளிதூங்கு தெள்அமுத வெள்அருவி பொழியும்நின்
                தொன்மரபு தழைய வந்து
        தோன்றிடும் கௌரியர் குலக்கொழுந் தைக்கண்டு
                துணைவிழியும் மனமும் நின்று

களிதூங்க அளவளாய் வாழாமல் உண்அமுது
                கலையொடும் இழந்து வெறுமண்
        கலத்திடு புதுக்கூ ழினுக்குஇரவு பூண்டுஒரு
                களங்கம்வைத் தாய்இ துஅலால்

ஒளி தூங்கு தெளிவிசும் பினின்நின்னொடு ஒத்தவன்
                ஒருத்தன் கரத்தின் வாரி
        உண்டுஒதுக் கியமிச்சில் நள்இருளில் அள்ளிஉண்டு
                ஓடுகின் றாய்என் செய்தாய்

அளிதூங்கு ஞிமிறுஎழுந்து ஆர்க்குங் குழல்திருவொடு
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை
   
71
மழைக்கொந் தளக்கோதை வம்மின்என் றுஅளவில்நீ
                வந்திலை எனக்க டுகலும்
        வாள்முகச் செவ்விக்கு உடைந்துஒதுங் கின்அவன்எதிர்
                வரஒல்கி யோபணி கள்கோள்

இழைக்கும்கொல் பின்தொடர்ந்து எனஅஞ்சி யோதாழ்த்து
                இருந்தனன் போலும் எனயாம்
        இத்துணையும் ஒருவாறு தப்புவித் தோம்வெகுளில்
                இனிஒரு பிழைப்புஇல்லை காண்

தழைக்கும் துகில்கொடி முகில்கொடி திரைத்துமேல்
                தலம்வளர் நகில்கொ டிகளைத்
        தாழ்குழலும் நீவிநுதல் வெயர்வும் துடைத்துஅம்மை
                சமயம்இது என்று அலுவலிட்டு

அழைக்கும் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுடன்
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை
   
72
ஏடுஅகத்து எழுதாத வேதச் சிரத்துஅரசு
                இருக்கும்இவள் சீறடி கள்நின்
        இதயத் தடத்தும் பொலிந்தவா திருஉளத்து
                எண்ணிஅன் றேக படமா

நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ
                நதியொடு முடித்தல் பெற்றாய்
        நங்கைஇவள் திருஉளம் மகிழ்ச்சிபெறில் இதுபோலொர்
                நற்றவப் பேறுஇல் லைகாண்

மாடகக் கடைதிரித்து இன்னரம் பார்த்துஉகிர்
                வடிம்புதை வரும்அந் நலார்
        மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில்
                வழங்கக் கொழுங்கோங் குதூங்கு

ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும்மது ரைத்திருவொடு
                அம்புலீ ஆட வாவே
        ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
                அம்புலீ ஆட வாவே
உரை