அம்மானைப்பருவம்
 
73
கரைக்கும் கடாம்இரு கவுள்குடம் உடைந்துஊற்று
                களிறுபெரு வயிறு தூர்ப்பக்
        கவளம் திரட்டிக் கொடுப்பதுஎன வும்சூழ்ந்தொர்
                கலைமதிக் கலசஅமுதுக்கு

இரைக்கும் பெருந்தேவர் புன்கண் துடைத்திட
                எடுத்தஅமுத கலசம்வெவ்வேறு
        ஈந்திடுவது எனவும்முழு முத்திட்டுஇழைத்திட்ட
                எறிபந்தின் நிரைஎன்னவும்

விரைக்கும் தளிர்க்கைக் கொழுந்தா மரைத்துஞ்சி
                மீதுஎழுந்து ஆர்த்தபிள்ளை
        வெள்ஓ திமத்திரள் இதுஎனவும் கரும்பாறை
                மீமிசைச் செஞ்சாந்துவைத்து

அரைக்கும் திரைக்கைவெள் அருவிவை கைத்துறைவி
                அம்மானை ஆடியருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடியருளே
உரை
   
74
திங்கள் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்
                செருகுதிரு மணவாளன்மேல்
        செழுமணப் பந்தரில் எடுத்துஎறியும் அமுதவெண்
                திரளையில் புரளும்அறுகால்

பைங்கண் சுரும்புஎன விசும்பில் படர்ந்துஎழும்
                பனிமதி மிசைத்தாவிடும்
        பருவமட மான்எனஎன் அம்மனைநின் அம்மனைப்
                படைவிழிக் கயல்பாய்ந்துஎழ

வெங்கண் கடுங்கொலைய வேழக்கு ழாம் இதுஎன
                மேகக் குழாத்தைமுட்டி
        விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை
                விண்டஅம் பைந்துகோத்த

அங்கண் கரும்புஏந்தும் அபிடேக வல்லிதிரு
                அம்மானை ஆடியருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடியருளே
உரை
   
75
கள்ஊறு கஞ்சக் கரத்துஊறு சேஒளி
                கலப்பச் சிவப்புஊறியும்
        கருணைப் பெருக்கூற அமுதூறு பார்வைக்
                கடைக்கண் கறுப்புஊறியும்

        நள்ளூறு மறுவூறு அகற்றுமுக மதியில்வெண்
                நகையூறு நிலவூறியும்
        நல்தரள அம்மனையொர் சிற்குணத் தினைமூன்று
                நற்குணம் கதுவல் காட்ட

உள்ஊறு களிதுளும் பக்குரவர் இருவீரும்
                உற்றிடு துவாதசாந்தத்து
        ஒருபெரு வெளிக்கே விழித்துஉறங் கும்தொண்டர்
                உழுவல்அன்பு என்புஉருகநெக்கு

அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்
                அம்மானை ஆடிஅருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடிஅருளே
உரை
   
76
குலைப்பட்ட காந்தள் தளிர்க்கையில் செம்மணி
                குயின்றஅம் மனைநித்திலம்
        கோத்தஅம் மனைமுன் செலப்பின் செலும்தன்மை
                கோகனக மனையாட்டிபால்

கலைப்பட்ட வெண்சுடர்க் கடவுள்தோய்ந்து ஏகஅது
                கண்டுகொண்டே புழுங்கும்
        காய்கதிர்க் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்பக்
                கறங்குஅருவி தூங்கஓங்கும்

மலைபட்ட ஆரமும் வயிரமும் பிறவும்அம்மா
        மாமணித் திரளைவாரி
        மறிதிரைக் கையால் எடுத்துஎறிய நாற்கோட்டு
                மதகளிறு பிளிறிஓடும்

அலைபட்ட வைகைத் துறைச்சிறை அனப்பேடை
                அம்மானை ஆடிஅருளே
        ஆகம்க லந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடிஅருளே
உரை
   
77
தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்
                தடக்கையின் எடுத்துஆடுநின்
        தரளஅம் மனைபிடித்து எதிர்வீசி வீசிஇட
                சாரிவல சாரிதிரியா

நிமிராமுன் அம்மனையொர் ஆயிரம் எடுத்துஎறிய
                நிரைநிரைய வாய்க்ககனமேல்
        நிற்கின்ற தம்மைநீ பெற்ற அகி லாண்டமும்
                நிரைத்துவைத் ததுகடுப்ப

இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப் பொழிலூடு
                எழுந்தபைந் தாதுஉலகெலாம்
        இருள்செயச் செய்துநின் சேனாபராகம் எனும்
                ஏக்கம்அள காபுரிக்கும்

அமரா வதிக்கும்செய் மதுரா புரித்தலைவி
                அம்மானை ஆடிஅருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடிஅருளே
உரை
   
78
உயிராய் இருக்கின்ற சேடியரின் மலர்மீது
                உதித்தவள் எதிர்த்துநின்னோடு
        ஒட்டிஎட் டிப்பிடித் திட்டஅம் மனைதேடி
                ஓடிஆ டித்திரியநீ

பெயராது இருந்துவிளை யாடுவது கண்டுஎந்தை
                பிறைமுடி துளக்கமுடிமேல்
        பெருகுசுர கங்கை நுரை பொங்கல்அம் மானைஅப்
                பெண்கொடியும் ஆடல்மான

வெயரா மனம்புழுங் கிடும்அமரர் தச்சனும்
                வியப்பச் செயும்தவளமா
        மேடையும் தண்தரள மாடமும் தெள்நிலா
                வீசத் திசைக்களிறுஎலாம்

அயிரா வதத்தினை நிகர்க்கும்மது ரைத்தலைவி
                அம்மானை ஆடிஅருளே
        ஆகம் கலந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண்
                அம்மானை ஆடிஅருளே
உரை
   
79

(வேறு)

முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்
                முளரிம ணம்கமழ
        மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்
                முயங்கி மயங்கியிடக்

கொத்து மணித்திர ளில்செயும் அம்மனை
                குயிலின்மி ழற்றியநின்
        குழலின் இசைக்குஉரு கிப்பனி தூங்கு
                குறுந்துளி சிந்தியிட

வித்துரு மத்தில் இழைத்தவும் நின்கை
                விரல்பவ ளத்தளிரின்
        விளைதரும் ஒள்ஒளி திருடப் போவதும்
                மீள்வது மாய்த்திரிய

அத்தன் மனத்துஎழு தியஉயிர் ஓவியம்
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை
   
80
விளரிமி ழற்றுஅருளி குமிறுகு ழல்கொடி
                வீசிய அம்மனைபோய்
        விண்ணில் நிரைத்தெழு வதுகக னந்திரு
                மேனிய தானவருக்கு

இளநிலவு உமிழ்பரு முத்தின் கோவை
                எடுத்துஅவர் திருமார்புக்கு
        இடுவ கடுப்பவும் அப்பரி சேபல
                மணியின் இயற்றியிடும்

வளர்ஒளி விம்மிய அம்மனை செல்வது
                வானவில் ஒத்திடவும்
        மனன்நெக்கு உருகப் பரமா னந்தம்
                மடுத்த திருத்தொண்டர்க்கு

அளிகனி யத்திரு அருள்கனி யும்கனி
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை
   
81
கைம்மல ரில்பொலி கதிர்முத்து அம்மனை
                நகைமுத்து ஒளிதோயக்
        கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்
                கமலச் சுடர் கதுவச்

செம்மணி யில்செய்து இழைத்தன எனவும்
                சிற்சிலர் கண்கடையின்
        செவ்விய வவ்விய பின்கரு மணியில்
                செய்தன கொல்எனவும்

தம்மனம் ஒப்ப உரைப்பன மற்றைச்
                சமயத்து அமைவுபெறார்
        தத்தமில் நின்று பிதற்றுவ பொருவத்
                தனிமுதல் யாம்என்பார்க்கு

அம்மனை ஆயவர் தம்மனை ஆனவள்
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை
   
82
ஒள்ஒளி மரகத மும்முழு நீலமும்
                ஒண்தர ளத்திரளும்
        ஒழுகுஒளி பொங்க இழைத்திடும் அம்மனை
                ஒருமூன்று அடைவில்எடாக்கள்

அவிழ் கோதை விசும்புற வீசுவ
                கண்நுதல் பால்செலநின்
        கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
                காமர் கருங்குயிலும்

பிள்ளைவெள் ஓதிம மும்முறை முறையால்
                பெருகிய காதலைமேல்
        பேச விடுப்ப கடுப்ப அணைத்துஒரு
                பெடையோடு அரசஅனம்

அள்ளல் வயல்துயில் மதுரைத் துரைமகள்
                ஆடுக அம்மனையே
        அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                ஆடுக அம்மனையே
உரை