நீராடற் பருவம்
 
83
வளைஆடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு
                மறிதிரைச் சங்குஓலிட
        மதர்அரிக் கண்கயல் வரிக்கய லொடும்புரள
                மகரந்தம் உண்டுவண்டின்

கிளைஆடு நின்திருக் கேசபா ரத்தினொடு
                கிளர்சை வலக்கொத்துஎழக்
        கிடையாத புதுவிருந்து எதிர்கொண்டு தத்தமின்
                கேளிர்கள் தழீஇக்கொண்டுஎனத்

தளையாடு கறைஅடிச் சிறுகண் பெருங்கைத்
                தடங்களிறு எடுத்துமற்றுஅத்
        தவளக் களிற்றினொடு முட்டவிட்டு எட்டுமத
                தந்தியும் பந்துஅடித்து

விளையாடும் வைகைத் தடந்துறை குடைந்துபுது
                வெள்ளநீர் ஆடிஅருளே
        விடைக்கொடி அவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த
                வெள்ளநீர் ஆடி அருளே [கொடி
உரை
   
84
நிரைபொங் கிடும்செங்கை வெள்வளை கலிப்பநகை
                நிலவுவிரி பவளம்வெளிர
        நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பஅறல்
                நெறிகுழல் கற்றைசரியத்

திரைபொங்கு தண்ணந் துறைக்குடைந்து ஆடுவ
                செழுந்தரங் கக்கங்கைநுண்
        சிறுதிவலை யாப்பொங்கும் ஆனந்த மாக்கடல்
                திளைத்துஆடு கின்றதுஏய்ப்பக்

கரைபொங்கு மறிதிரைக் கையால் தடம்பணைக்
                கழனியில் கன்னியர்முலைக்
        களபக் குழம்பைக் கரைத்துவிட்டு அள்ளல்
                கருஞ்சேறு செஞ்சேற தாய்

விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது
                வெள்ளநீர் ஆடிஅருளே
        விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த
                வெள்ளநீர் ஆடிஅருளே. கொடி
உரை
   
85
பண்நாறு கிளிமொழிப் பாவைநின் திருமேனி
                பாசொளி விரிப்பஅம்தண்
        பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்
                பருமுத்த மரகதம்அதாய்த்

தண்நாறும் மல்லல் துறைச்சிறை அனம்களி
                தழைக்கும் கலாமஞ்ஞையாய்ச்
        சகலமும் நின்திருச் சொருபம்என்று ஓலிடும்
                சதுர்மறைப் பொருள்வெளியிடக்

கள்நாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்
                களபமும் கத்தூரியும்
        கப்புரமும் ஒக்கக் கரைத்துஓடி வாணியும்
                காளிந்தி யும்கங்கையாம்

விண்ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
                வெள்ளநீர் ஆடி அருளே
        விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த
                வெள்ளநீர் ஆடிஅருளே கொடி
உரை
   
86
தூங்குசிறை அறுகால் உறங்குகுழல் நின் துணைத்
                தோழியர்கள் மேல்குங்குமம்
        தோயும் பனித்துறைச் சிவிறிவீ சக்குறுந்
                துளிஎம் மருங்கும்ஓடி

வாங்குமலை வில்லியார் விண்உரு நனைத்துஅவர்
                வனைந்திடு திகம்பரம்செவ்
        வண்ணமாச் செய்வதுஅச் செவ்வான வண்ணரொடு
                மஞ்சள்விளை யாடல்ஏய்ப்பத்

தேங்குமலை அருவிநெடு நீத்தத்து மாசுணத்
                திரள்புறம் சுற்றிஈர்ப்பச்
        சினவேழம் ஒன்றோடு சுழிச்சுழலல் மந்தரம்
                திரைகடல் மதித்தல்மானும்

வீங்குபுனல் வைகைத் தடந்துறை குடைந்துபுது
                வெள்ளநீர் ஆடிஅருளே
        விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த
                வெள்ளநீர் ஆடிஅருளே (கொடி
உரை
   
87
துளிக்கும் பனித்திவலை சிதறிக் குடைந்துஆடு
                துறையில் துறைத்தமிழொடும்
        தொன்மறை தெளிக்கும் கலைக்கொடி எனும்துணைத்
                தோழிமூழ் கிப்புனல்மடுத்து

ஒளிக்கும் பதத்துமற்று அவள்என அனப்பேடை
                ஓடிப் பிடிப்பதுஅம்மை
        ஒண்பரி புரத்தொனியும் மடநடையும் வௌவினது
                உணர்ந்துபின் தொடர்வதுஏய்ப்ப

நெளிக்கும் தரங்கத் தடம்கங்கை உடன்ஒட்டி
                நித்திலப் பந்துஆடவும்
        நிரைமணித் திரளின் கழங்குஆட உந்தன்
                நெடுந்திரைக் கைஎடுத்து

விளிக்கும் பெருந்தண் துறைக்கடவுள் வைகைநெடு
                வெள்ளநீர் ஆடிஅருளே
        விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்தகொடி
                வெள்ளநீர் ஆடிஅருளே
உரை
   
88

(வேறு)

துங்க முலைப்பொன் குடம்கொண்டு
                தூநீர் நீந்தி விளையாடும்
        துணைச்சே டியர்கள் மேல்பசும்பொன்
                சுண்ணம் எறிய அறச்சேந்த

அங்கண் விசும்பில் நின்குழல்காட்டு
                அறுகால் சுரும்பர் எழுந்துஆர்ப்ப
        தையல் திருமே னியில்அம்மை
                அருள்கண் சுரும்புஆர்த் துஎழல்மானச்

செங்கண் இளைஞர் களிக்காமத்
                தீமூண் டிடக்கண்டு இளமகளிர்
        செழுமென் குழல்கூட்டு அகில்புகையால்
                திரள்காய்க் கதலி பழுத்துநறை

பொங்கு மதுரைப் பெருமாட்டி
                புதுநீர் ஆடி அருளுகவே
        பொருநைத் துறைவன் பொற்பாவாய்
                புதுநீர் ஆடி அருளுகவே
உரை
   
89
இழியும் புனல்தண் துறைமுன்றில்
                இதுஎம் பெருமான் மண்சுமந்த
        இடம்என்று அலர்வெண் கமலப்பெண்
                இசைப்பக் கசிந்துஉள் உருகிஇரு

விழியும் சிவப்ப ஆனந்த
                வெள்ளம் பொழிந்து நின்றனையால்
        மீண்டும் பெருக விடுத்தவற்குஓர்
                வேலை இடுதல் மிகைஅன்றே

பிழியும் நறைக்கற் பகம்மலர்ந்த
                பிரச மலர்ப்பூந் துகள்மூழ்கும்
        பிறைக்கோட்டு அயிரா வதம்கூந்தல்
                பிடியோடு ஆடத் தேன்அருவி

பொழியும் பொழில்கூ டலில்பொலிவாய்
                புதுநீர் ஆடி அருளுகவே
        பொருநைத் துறைவன் பொற்பாவாய்
                புதுநீர் ஆடி அருளுகவே
உரை
   
90
மறிக்கும் திரைத்தண் புனல்வைகை
                வண்டல் இடுமண் கூடைகட்டி
        வாரிச் சும்ந்தோர் அம்மைதுணை
                மணிப்பொன் குடத்தில் கரைதூற்றும்

வெறிக்குங் குமச்சேறு எக்கரிடும்
                விரைப்பூந் துறைமண் பெறின்ஒருத்தி
        வெண்பிட்டு இடவும் அடித்துஒருவன்
                வேலை கொளவும் வேண்டும்எனக்

குறிக்கும் இடத்தில் தடம்தூநீர்
                குடையப் பெறின்அக் கங்கைதிருக்
        கோடீ ரத்துக் குடியிருப்பும்
                கூடா போலும் பொலன்குவட்டுப்

பொறிக்கும் சுறவக் கொடிஉயர்த்தாய்
                புதுநீர் ஆடி அருளுகவே
        பொருநைத் துறைவன் பொற்பாவாய்
                புதுநீர் ஆடி அருளுகவே
உரை
   
91

(வேறு)

சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து
                தொடுத்த விரைத்தொடையும்
        சுந்தரி தீட்டிய சிந்துர மும்இரு
                துங்கக் கொங்கைகளின்

விற்கொடி கோட்டிய குங்கும மும்குடை
                வெள்ளம் கொள்ளைகொள
        வெளியே கண்டுநின் வடிவழகு ஐயன்
                விழிக்கு விருந்துசெய

இல்கொடியோடு கயல்கொடி வீரன்
                எடுத்த கருப்புவிலும்
        இந்திர தனுவும் வணங்க வணங்கும்
                இணைப்புரு வக்கொடிசேர்

பொற்கொடி இமய மடக்கொடி வைகைப்
                புதுநீர் ஆடுகவே
        பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
                புதுநீர் ஆடுகவே
உரை
   
92
கொள்ளைவெள் அருவி படிந்திடும் இமயக்
                கூந்தல் மடப்பிடிபோல்
        கொற்கைத் துறையில் சிறைவிரி யப்புனல்
                குடையும் அனப்பெடைபோல்

தெள்ளமு தக்கடல் நடுவில் தோன்று
                செழுங்கம லக்குயில்போல்
        தெய்வக் கங்கைத் திரையூடு எழும்ஒரு
                செம்பவ ளக்கொடிபோல்

கள்அவிழ் கோதையர் குழலில் குழல்இசை
                கற்றுப் பொன்தருவில்
        களிநறவு உண்ட மடப்பெடை யோடு
                கலந்து முயங்கிவரிப்

புள்உறை பூம்பொழில் மதுரைத் துரைமகள்
                புதுநீர் ஆடுகவே
        பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
                புதுநீர் ஆடுகவே
உரை