தண்தே னொழுகு மொழிமடவார்
தாமங் கொழுதிச் சுருண்டிருண்டு
தமரக் களிவண் டடைகிடந்து
தழைத்து நெறித்த குழற்பாரங்
கொண்டே மெலிந்த தல்லாது
குரம்பைக் களப முலைசுமந்து
கொடிபோல் மருங்குல் குடிவாங்கக்
குழையிற் குதித்த விழிக்கயலைக்
கண்டே வெருவிக் கயல்மறுகக்
கனக வெயில்மா ளிகையுடுத்துக்
ககனம் தடவுங் கோபுரத்தைக்
கருதி வடவெற் பெனக்கதிரோன்
திண்தேர் மறுகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.
|