அரைவடமுந் தண்டையும் மின்புரை யரைமணியுங்
            கிண்கிணி யுங்கல னணியு மாறா வீறார்சீர்
        அறுமுகமுந் தொங்கல் சுமந்தபன் னிருகரமும்
            குண்டல முங்குழை யழகும் ஆரார் பாராதார்

        விரைபொருமென் குஞ்சிஅ லம்பிய புழுதியுமங்
            கங்குழை பண்டியு மெலியு மேலே வீழ்வார்பார்
        வெகுவிதமுங் கொண்டு தவழ்ந்திடில் அவரவர்தங்
            கண்கள் படும்பிழை விளையு மேதே னேகாதே

        வரைமணியும் தங்கமும் ஒன்றிய கனபரியங்
            கந்தனில் இன்றுகண் வளர வாராய் வாழ்வேநீ
        மணிநகையுங் கொண்டு துயின்றிலை விரலமுதங்
            கொண்டுகி டந்தனை மதுரமாய்நீ பேசாயோ

        திரைபொருதென் செந்தில் வளம்பதி வளரவருங்
            கந்தசி வன்பெறு சிறுவா தாலோ தாலேலோ
        திசைமுகனுஞ் சங்கரி யுஞ்சது மறையும் இறைஞ்
            சும்பரை அம்பிகை சிறுவா தாலோ தாலேலோ.