New Page 1

        பௌவமெறி கடலாடை உலகிலொரு வேடுவன்
            பறவைக்கு நிறைபு குந்த
        பார்த்திவன் பாவையும் இயற்குலச் சிறையும்
            பணித்தருள மதுரை புக்குத்

        தெவ்வரிடு திருமடத் தெரிசெழிய னுடலுறச்
            சென்றுபற் றலும்எ வர்க்குந்
        தீராத வடவையனல் வெப்புமுது கூனுந்
            திருத்தியொரு வாது வென்று

        வெவ்வழலில் எழுதியிடும் ஏடும் பெருக்காற்று
            விட்டதமி ழேடும் ஒக்க
        வேகாம லெதிரே குடக்கேற வெங்கழுவில்
            வெய்யசமண் மூகர் ஏறச்

        சைவநெறிஈடேற வருகவுணி யக்குழவி
            சப்பாணி கொட்டி யருளே
        சமரமுக ரணவீர பரசமய திமிராரி
            சப்பாணி கொட்டி யருளே.