வளைக்குந்
தமரக் கருங்கடலின்
வளைவாய் உகுத்த மணிமுத்துன்
வடிவேற் கறைபட் டுடல்கறுத்து
மாசு படைத்த மணிமுத்தம்
துளைக்குந்
கழையிற் பருமுத்தம்
துளபத் தொடைமால் இதழ்பருகித்
தூற்றுந்
திவலை தெறித்த முத்தம்
சுரக்கும் புயலிற் சொரிமுத்தம்
திளைக்குங்
கவன மயிற்சிறையிற்
சிறுதூட் பொதிந்த குறுமுத்தஞ்
செந்நெல்
முத்தங் கடைசியர்கால்
தேய்த்த முத்தஞ் செழுந்தண்தேன்
முளைக்குங் குமுதக் கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
முத்தஞ்
சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தந் தருகவே.
|