கலைப்பால்
குறைந்த பிறைமுடிக்குங்
கடவுள் உடலின் விளைபோகங்
கனலி கரத்தில் அளிக்க அந்தக்
கனலி பொறுக்க மாட்டாமல்
மலைப்பால்
விளங்கஞ் சரவணத்தில்
வந்து புகுத ஓராறு
மடவார் வயிறு குலுளைந்து
மைந்தர் அறுவர்ப் பயந்தெடுப்பக்
கொலைப்பால்
விளங்கும் பரசுதரன்
குன்றி லவரைக் கொடுசெல்லக்
கூட்டி
அணைத்துச் சேரவொரு
கோலம் ஆக்கிக் கவுரிதிரு
முலைப்பால்
குடித்த கனிவாயால்
முருகா முத்தம் தருகவே
முத்தஞ்
சொரியுங் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.
|