ஓடைக் குளிர்தண் துளிப்பனியால்
            உடைந்து திரையில் தவழ்ந்தேறி
        ஒளிரும் புளினத் திடையொதுங்கி
            உறங்குங் கமடம் தனைக்கடந்து

        கோடைக் குளிர்காற் றடிக்கஉடல்
            கொடுகி நடுங்கி ஊன்கழிந்த
        குடக்கூன் பணிலத் துட்புகுந்து
            குஞ்சுக் கிரங்கி இரைகொடுக்கும்

        பேடைக் குருகக் கொருசேவற்
            பெரிய குருகின் சிறைப்புறத்துப்
        பிள்ளைக் குருகு தனையணைத்துப்
            பிரச மடற்கே தகைப்பொதும்பின்

        வாடைக் கொதுங்குந் திருச்செந்தூர்
            வடிவேல முருகா வருகவே
        வடிவேல் களபக் குரும்பைமுலை

            வள்ளி கணவா வருகவே.