விண்டு மாவின் கனிதடத்தின்
            மீதோ வீழக் குருகினங்கள்
        வெருவி இரியக் கயல்வெகுண்டு
            வெடிபோய் மீள மண்டூகம்

        கண்டு பாய வரிவளை
            கழிக்கே பாயக் கழிக்கானற்
        கம்புள் வெகுண்டு துண்ணெனக்கட்
            கடைதாள் விழித்துத் தன்பார்ப்பைக்

        கொண்டு போயக் கருவாளைக்
            குலைக்கே பாயக் குடக்கனியின்
        குறுங்காற் பலவு வேர்சாய்ந்த
            குழிக்கே கோடி கோடிவரி

        வண்டு பாயுந் திருச்செந்தூர்
            வடிவேல் முருகா வருகவே
        வளருங் களபக் குரும்பைமுலை
            வள்ளி கணவா வருகவே.