கலைதெரி புகலி வளமுற மருவு
            கவுணிய வருக வருகவே
        கருணையின் உரிமை அடியவர் கொடிய
            கலிகெட வருக வருகவே

        சிலைபொரு புருவ வனிதையர் அறுவர்
            திருவுள மகிழ வருகவே
        சிறுதுளி வெயர்வு குதிகொள உனது
            திருமுக மலர வருகவே

        கொலைபுரி விகட மணிமுடி நிருதர்
            குலமற வருக வருகவே
        குருமணி வயிரம் இருசிகை நெடிய
            குழைபொர வருக வருகவே

        மலைமகள் கவுரி திருமுலை பருகு
            மழவிடை வருக வருகவே
        வளையுமிழ் தரளம் அலையெறி நகரில்
            வரபதி வருக வருகவே.