கலையால் நிரம்பாத கலையுண் டுனக்கு நிறை
            கலையுண் டிவன்தனக்குக்
        களங்கமரு குறமான் உனக்குண்டு குறமான்
            கருத்துண் டிவன்தனக்குத்

        தொலையாத கணமுண் டுனக்குமங் கலகணத்
            தொகையுண் டிவன்தனக்குத்
        துளியமுத முண்டுனக் கிவனுக்கு மாறாத
            சொல்லமுதம் உண்டுனக்குக்

        கொலையா டராவழிப் பகையுண்டு கடுவிடங்
            கொப்புளிக் குங்கட்செவிக்
        கோளரா வைக்கொத்தி யெறியுமே காரமிக்
            குமரனுக் குண்டுகண்டாய்

        அலையாழி சூழ்திருச் செந்தில்வடி வேலனுடன்
            அம்புலீ ஆடவாவே
        அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
            அம்புலீ யாடவாவே.