வட

        வட்டமா கத்துள்வெளி வடிவுகொள லாலென்று
            மானைத் தரித்திடுகையால்
        மந்தா கினித்தரங் கத்துவளம் எய்தலால்
            மன்னுங் கணஞ்சூதலால்

        இட்டமொடு பேரிரவில் வீறுபெற லாலுலகில்
            எவருந் துதித்திடுதலால்
        இரவின்கண் ணுறுதலால் இடபத்தி லேறாலால்
            ஏமமால் வரையெய்தலால்

        முட்டமறை வேள்விக் குரித்தாகை யால் வெய்ய
            மூரியர வுக்குடைதலால்
        முக்கண்ணுமை பங்கனா ரொக்குநீ யென்றுதிரு
            முகமலர்ந் துளையழைத்தால்

        அட்டபோ கம்பொறுவை செந்தில்வடி வேலனுடன்
            அம்புலீ ஆடவாவே
        அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
            அம்புலீ ஆடவாவே.