வரைவாய் முழங்குங் கடாயானை வெங்கூன்
            மருப்பில்விளை முத்துமிளவேய்
        மணிமுத்து மடுபாலை வனசுரத் திற்கரு
            வராகத்தின் மத்துமண்டர்

        உரைவாய் முழக்கும் பெரும்புறவி லுந்திநத்
            துமிழுமணி முத்துமள்ளர்
        ஒளியறா மருதவே லிச்செந்நெல் கன்னல் தரும்
            ஒளிமுத்தும் ஒங்குநெய்தற

        கரைவாய் முழக்குமுட் கூனல்வெண் பணிலம்
            கடுஞ்சூல் உளைந்துகான்ற
        கதிர்முத்தும் ஒக்கக் கொழித்துவரு பொருநைபாய்
            கழிதொறுங் கயல்குதிக்கத்

        திரைவாய் முழக்குந் திருச்செந்தில் வேலனே
            சிறுபறை முழக்கியருளே
        செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
            சிறுபறை முழக்கியருளே.