காயுங் கொடும்பகைத் தாருக விநாசினி
            கபாலிகங் காளிநீலி
        காளிமுக் கண்ணிஎண் தோளிமா தரிவீரி
            கவுரிகலை யூர்திகன்னி

        பாயுந் தழற்புகைப் பாலைக் கிழத்திவெம்
            பண்ணம் பணத்திமோடி
        பரசுதரன் உடன்நடனம் இடுசூலி சாமுண்டி
            பாதார விந்தநினைவாம்

        ஆயும் பெருபனுவ லாசுகவி மதுரகவி
            அரியசித் திரகவிதைவித்
        தாரகவி இடுமுடிப் புக்குள மயங்காமல்
            அடியவர்க் கருள்குருபரன்

        தேயும் பனிப்பிறைத் திருநுதற் கடல்மகளிர்
            தெள்நித் திலங்கொழித்துச்
        சிற்றில்விளை யாடல்புரி யுந்திருச் செந்தில்வரு
            சேவகன் புகழ்பாடவே.