எழுமிரவி மட்கஒளி தருமணி யழுத்துமுடி
            இமையவர் மகிழ்ச்சிபெறவே
       இருகுழை பிடித்தவிழி அரமகளிர் சுற்றிநடம்
            இதுவென நடித்துவரவே

        வழுவறு தமிழ்ப்பனுவல் முறைமுறை யுரைத்துவெகு
            வரகவிஞர் உட்குழையவே
        மகபதியு மிக்கமுனி வரர்கணமும் இச்சையுடன்
            வழியடிமை செப்பியிடவே

        பொழுதுதொறும் ஒக்கவிதி முறையுனை அருச்சனைசெய்
            புனிதசிவ விப்ரருடனே
        புகலரிய பத்தசனம் அரகர வெனக்குலவு
            புரவலர் விருப்பமுறவே

        செழுமறை முழக்கவரு முருககும ரக்கடவுள்
            சிறுபறை முழக்கியருளே
        திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
            சிறுபறை முழக்கியருளே.