மிஞ்சுங் கனக மணித்தொட்டில்
            மீதே இருத்தித் தாலுரைத்து
        வேண்டும் படிசப் பாணிகொட்டி
            விருப்பாய் முத்தந் தனைக்கேட்டு

        நெஞ்சு மகிழ வரவழைத்து
            நிலவை வருவாய் எனப்புகன்று
        நித்தல் உனது பணிவிடையின்
            நிலைமை குலையேம் நீயறிவாய்

        பிஞ்சு மதியின் ஒருமருப்புப்
            பிறங்கும் இருதாட் கவுட்சுவடு
        பிழியுங் கரட மும்மதத்துப்
            பெருத்த நால்வாய்த் திருத்தமிகும்

        அஞ்ச கரக்குஞ் சரத்துணையே
            அடியேம் சிற்றில் அழியேலே
        அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
            அரசே சிற்றில் அழியேலே.