துன்று
திரைக்குண் டகழ்மடுவில்
சூரன்
ஒளிக்கப் பகைநிருதர்
தொல்லைப் பதியும் அவரிருந்து
துய்த்த
வளமுந் தூளாக்கி
வென்று
செருவிற் பொருதழித்தாய்
வேதா விதித்த விதிப்படியை
விலக்கி வெகுண்டு மீண்டளித்தாய்
வேண்டும் அடியார் வினையொழித்தாய்
கன்றும்
அமணர் கழுவேறக்
காழிப்பதியில் வந்துதித்துக்
கள்ளப் பரச மயக்குறும்பர்
கலகம் ஒழித்துக் கட்டழித்தாய்
அன்று
தொடுத்துன் வழியடிமை
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுந் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே
|