பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்129


எழுசீர் சந்த விருத்தம்
119.
எறிவே லிரண்டுமென துயிர்சோ ரவுண்டுலவ    
   இகல்வா ளிரண்டு விசிறா    
வெறிசேர் கடம்பவன மதுரே சர்முன்குலவி    
   விளையா டுமின்கொ டியனீர்    
சிறுநூன் மருங்குலிறு மிறுமா கொலென்றுசில    
   சிலநூ புரஞ்சொன் முறையீ    
டறியீ மெனெஞ்சுமல மரவே சுழன்றிடுநும்    
   அதிவே கநன்ற றவுமே.    
(16)

கட்டளைக் கலித்துறை
 120.
அறந்தந்த பொன்பொலி கூடற்பிரான்வெற்பி லம்பொற்படாம்
 நிறந்தந்த கும்ப மதயானையுநெடுந் தேர்ப்பரப்பும்
 மறந்தந்த விற்படை வாட்படையுங்கொண்டு மற்றொருநீ
 புறந்தந்த வாவணங் கேநன்றுகாமவெம் போரினுக்கே.    
(17)

    119. (சந்தக் குழிப்பு.) தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்த தனனா. இரு கைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி ஆடும் ஒரு மதங்கச்சாதி மங்கையை நோக்கி ஓரிளைஞன் காமுற்றுக் கூறும் கூற்று இது. மதங்கர் - இசைக்கும் கூத்துக்கும் உரிய ஒரு சாதியார்.

    எறிவேலிரண்டென்றது கண்களை. விசிறா - விசிறி. வெறி - நறுமணம். மின்கொடியனீர் - மின்னற்கொடியை ஒப்பவரே. நூலைப்போன்ற மருங்குல் ஆ: இரக்கக்குறிப்பு. நூபுரம் - சிலம்பு. சொல் முறையீடு - முறையீட்டுச் சொற்களை. (பி-ம்.) ‘சிலை நூபுரம்’.

    இரண்டு கண்களுமே என்னுடைய உயிரைக் கவராநிற்ப இரண்டு வாள்களைச் சுழற்றுவது மிகையென்றபடி.

    120. நாணத்தால் தன்முகத்தை நோக்காமல் தலைவி புறங் காட்டிய போது தலைவன் கூறியது இது. இது புறங்காட்டல் என்னும் துறை.

    பொன்: அம்பிகை. படாம் - முகபடாம், கச்சு. மதயானையென்றது நகில்களை. தேர்ப்பரப்பு: அல்குல். விற்படை: புருவங்கள். வாட்படை: கண்கள். காமவெம்போர் - புணர்ச்சி. புறந்தந்தவா - என்ன வியப்பு? முதுகைக்காட்டியது புறங்காட்டுவது தோற்றோர் செயல்.

    போர்க்குரிய கருவிகளாகிய யானை முதலியவற்றையுடைய நீ காமப்போரில் புறங்காட்டியது பொருத்தனம்றென்றபடி.