பக்கம் எண் :

16குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

99.
பகைவன் முதலாய பாலருடமன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
100.
வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடுஞ்
சூருடலங் கீண்ட சுடர்வேலோய் - போரவுணன்
101.
அங்கமிரு கூறா யடன்மயிலுஞ் சேவலுமாய்த்
துங்கமுட னார்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
102.
சீறுமர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்து மிளையோனே - மாறிவரு
103.
சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென
மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர்
104.
குறைமுடித்து விண்ணங் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்தாட் கொண்டளித்ததேவே - மறைமுடிவாம்

    98-9. பானுப்பகைவன் - பானுகோபன் (கந்த. புதல்வரைப். 15-6) வாகை - வெற்றிமாலை, முடித்தோய் - அணிந்தவனே.

    100. புதிய மாவாய் - புதுமையையுடைய மாமரமாகி; வேர் மேலும் மரத்தின் ஏனைய பகுதிகள் கீழுமாகச் சூரன் நின்றானென்பது ஒரு சாரார் கொள்கையாதலின் இங்கே அச்செயலையே புதுமையாக் கொண்டார்போலும்; “அகறிரைப் பரப்பிற் சடையசைந் தலையாது, கீழிணர் நின்ற மேற்பகை மாவின், ஓருட லிரண்டு கூறுபட விடுத்த ..................அரத்தநெடுவேலோய்)”, “மணிதிரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த, களவுடல் பிளந்த வொளிகெழு திருவேல்”, “பெருங்கள விணர்தந் தவை கீழ்க்குலவிய, விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்” எனவரும் கல்லாடச் செய்யுட்கள் இக்கருத்தை வலியுறுத்தும். அவுணன் - அசுரன்; இங்கே சூரன்.

    102. சித்ரமயில் - அழகையுடைய மயில், இளையோன் - என்றும் அழியாத இளமையை உடையவன்; “என்றும், இளையாய்” (முருக. இறுதிவெண்பா); “என்று மழியாத விளமைக்கார” (திருப்புகழ்.)

    103. பகைவனாகிய சூரனே சேவலுருவம் எடுத்தமையின் சேவற் பகையென்றார். பதாகை - பெருங்கொடி, தனித்துயர்த்த - பிற கொடிகளெல்லாம் தனக்குத் தாழ்ந்து நிற்ப, அவற்றிற்கெல்லாம் மேலாக உயர்த்திய; “புலியேறு தனியேற” (தக்க. 4) என்பதும், புலியேறு தனியேற என்றதனால் பாராட்டி ரத்து இராசாக்களுடைய அநேக கொடிகள் சேவிக்கும் முறையில் அயற்கண்ணே தாழ வரையப்பட்டிருப்ப’ என்ற அதன் விசேடவுரையும் இங்கே உணரற்பாலன. மூவர் - மூம்மூர்த்திகள்.

    100-103. இவற்றிற் கூறப்பட்ட செய்திகளின் விரிவைக் கந்தபுராணம், சூரன் வதைப்படலத்தால் உணரலாகும்.