பக்கம் எண் :

368குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
474.
வாடிய நுண்ணிடை வஞ்சியன்னீர்தில்லை மன்றினுணின்
றாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்
நீடிய கங்குலுங் கண்ணிரண்டாலுற நெற்றிக்கண்ணாற்
கூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே.
(25)

நேரிசையாசிரியப்பா
475.
கொடியு முரசுங் கொற்றவெண் குடையும்
பிறர்கொளப் பொறா அன்றானே கொண்டு
பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்
செவியிற் கண்டு கண்ணிற் கூறி
5
இருநிலம் புரக்கு மொருபெருவேந்தன்
மிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்

    474. தலைவி மாலைப்பொழுதுகண்டிரங்கல்.

    வஞ்சியன்னீரென்றது தோழியரை; வஞ்சி - வஞ்சிக்கொடியை. வலக் கண்ணாற் பகலும், இடக்கண்ணால் இரவும் உண்டாயின (547.) நெற்றிக்கண் அக்கினியாதலின் தீப்பொழுது உண்டாயிற்று; தீப்பொழுது - விரகத் தீயை எழுப்பும் பொழுது, தீய பொழுது, பகலையும் இரவையும் இரண்டு கண்கள் செய்ய, அவ்விரண்டு பொழுதுகளுக்கும் இடையேயுள்ள மாலைப்பொழுதை அவ்விரண்டு கண்களுக்கும் இடையே்யுள்ள நெற்றிக்கண் உண்டாக்கிய தென்றது ஒருநயம்.

    475. அவாவின்மையை வேண்டுகின்றார்.

    (அடி, 1-13) அரச பதவியிலுள்ளோரும் சிந்தை நிறைவின்றி அவாவினாற் கவலையுற்றுத் துன்புறுதல் கூறப்படும்.

    (1) கொற்றம் - அரசுரிமை.

    (2) பிறர்கொளப் பொறாஅன்: “போகம் வேண்டிப் பொதுசொற் பொறாஅன்” (புறநா. 8:2.) (பி-ம்.) ‘பெறாஅன்’.

    (1-3) “பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு” (கலி. 68); “தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி, வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்” (புறநா. 189: 1-2) பொது நீங்கி திகிரி - ஏக சக்கராதிபத்தியம்; “வலநேமி தனிகோலு குலதீபன்” (தக்க. 2).

    (4) செவியிற் கண்டு - ஒற்றர் மூலமாகக் கேட்டறிந்து, கண்ணிற் கூறி - குறிப்பால் அறிபவர்களுக்குச் செய்யவேண்டியவற்றைப் பார்வையாற் புலப்படுத்தி; “கண்ணிற் சொலிச்செவியினோக்கு மிறைமாட்சி” (233) என்றார் முன்னும்.

    (6) மிக்கோன் - செல்வத்தால் மிக்கவன். வெறுக்கை - செல்வம்.