இது மூன்றடியாய் இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று ஒரு விகற்பத்தால் வந்தமையால் ஒருவிகற்ப நேரிசைச் சிந்தயல்வெண்பா.
மேருவை; “எழில்பெறு மிமயத் தியல்புடை யம்பொற், பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில்” (திருவா. கீர்த்தித்.) அண்டர்கள் - தேவர்கள். மறலி - யமன். புடைத்து - தண்டித்து. கொடிறு உடைக்கும் - கன்னத்தில் அடிக்கும் (278; குறள், 1077)’ அன்றும்: உம்மை உயர்வு சிறப்பு.
இச்செய்யுள் யமபயத்தை நினைவுறுத்தி நடராசப் பெருமானது தரிசனத்தை வற்புறுத்தியது (520).
504. கண் மலர் சாத்த - பார்க்க, கருங்குவளை செங்குவளை பூத்தாள் - ஊடலால் விழி சிவந்த உமாதேவியார். கோமானது பங்கில் உற்றும் பசப்புத் தீர்ந்திலது. பசப்பு - பசலை; இது கணவரைப் பிரியும் காலத்தில் மகளிருக்கு உண்டாகும் பொன் நிறம். கண், நெற்றி முதலிய இடங்களிற் பசலை உண்டாதலின், அவ்வகைபற்றித் தீராவெனப் பன்மையாற் கூறினார். உமாதேவியார் சிவபெருமானோடு சேர்ந்திருந்தும் பசலை தீரவில்லையென்ற பொருள் தோற்றி, அத்தேவியாரது ஊடல் மிகுதியைப் புலப்படுத்தியது. பசுமை நிறமென்பது இயல்பான பொருள்.