பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்53

33.
தகரக் கரியகு ழற்சிறு பெண்பிளை
   நீயோ தூயோன்வாழ்
சயிலத் தெயிலைவ ளைப்பவ ளென்றெதிர்
   சீறா வீறோதா

நிகரிட் டமர்செய்க ணத்தவர் தந்திபி  
   ரானோ டேயோடா  
நிலைகெட் டுலையவு டற்றவு டைந்ததொ  
   ரானே றாகாமே  

சிகரப் பொதியமி சைத்தவ ழுஞ்சிறு      
   தேர்மே லேபோயோர்      
சிவனைப் பொருதச மர்த்தனு கந்துள      
   சேல்போன் மாயாமே      

மகரத் துவசமு யர்த்தபொ லன்கொடி  
   தாலோ தாலேலோ  
மலயத் துவசன்வ ளர்த்தப சுங்கிளி  
   தாலோ தாலேலோ.    
(10)

    33. அம்பிகையின் மீனக்கொடியினது பெருமை கூறப்படும்.

    அங்கயற்கண்ணம்மை திக்குவிசயம் செய்த காலையில் கயிலையின் கண் சிவபிரானுடைய படைத்தலைவர்கள் புறகிட்டு ஒடும்போது அவர்கள் பிடித்த விடைக் கொடியைப்போலவும், சிவபெருமானுடைய யோகத்தைக் கலைத்தற்குச் சென்ற மன்மதனுடைய மீனக்கொடியைப் போலவும் அம்பிகையின் கொடி தோல்வியடையவில்லை யென்பது இதிற் கூறப்படும் செய்தி.

    (அடி, 1) தகரம் - மயர்ச் சாந்து. பெண்பிளை - பெண்பிள்ளை: விளி; வழக்கு. தூயோன் - சிவபெருமான். சயிலம் - கயிலை மலை.

    (2) நிகரிட்டு - எதிர்த்து. கணத்தவர் - பூதகணத்தினர். உடற்ற - போர் செய்ய. உடைந்ததாகிய ஓர் ஆனேறு; என்றது சிவபெருமானது பொடியிலுள்ள விடையை.

    (3) சமர்த்தன் - மன்மதன். (பி-ம்.) ‘உகந்தருள்’. மன்மதன் எரிந்த காலத்தில் அவன் கொடியும் எருந்ததாதலின், சேல்போல் மாயாமே யென்றார்.

    (4) மகரத் துவசம் - மீனக்கொடி.

     (முடிபு.) என்று சீறா ஓதா நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்தி பிரானோடே ஓடா, கெட்டு உலைய உடற்ற அப்போது உடைந்த ஆனேறு; ஆனேறு ஆகாமலும் சேல்போல் மாயாமலும் மகரத்துவசத்தை உயர்த்த கொடியென்க.