பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா7

39.
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்
கருள்பொழியுங் கண்மலரீ ராறும் - பருதி
40.
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்
41.
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும் - வின்மலிதோள்
42.
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சுர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்துத் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்
43.
ஊழ்வினையை மாற்றி யுலவாத பேரின்ப
வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
44.
வடிக்கும் பழமறைக ளாகமங்கள் யாவும்
முடிக்குங் கமல முகமும் - விடுத்தகலாப்
45.
பாச விருடுரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாசமலர்வதன மண்டலமும் - நேசமுடன்
46.
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடுக்கும்
மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன்

களை நுதலுக்கு உவமையாக்கிப், பதித்தனைய நுதல், புண்டரம் பூத்த நுதலெனக் கூட்டிப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.

    40. பல - பன்னிரண்டு.

    41. வில் மலி தோள் - விற்படை பொருந்திய தோள். வில்லென்பதற்கு ஒளியென்று பொருள்கொண்டு தொடி முதலியவற்றின் ஒளி நிறைந்த தோளெனினும் ஆம்.

    42. இது முதல் திருமுகங்களின் செயல்கள் கூறப்படும்.

    போற்று இசைக்கும் - தோத்திரம் செய்யும். தெவ்வர் - பகைவர்.

    43. உலவாத - அழியாத.

    44. பழமறைகள்: “பாமேவு தெய்வப் பழமறையும்” என்றார் முன்னும்; 1. முடிக்கும் - ஐயமின்றி முற்றுப்பெறச் செய்யும். விடுத்து அகலா - உயிர்களை விட்டு நீங்காத.

    45. பல் கதிரின் - பல சூரியர்களைப்போல.

    46. புத்தேளிர் பூங்கொடி - தெய்வயானையம்மையார்.