முகப்பு தொடக்கம்

காமமென் கின்ற கதுவுவெந் தீயுங்
      கடுஞ்சின மெனப்படு புலியுங்
களிப்பெனுஞ் சிறுகட் புகர்முகப் புழைக்கைக்
      கறையடிக் களிநல்யா னையுமே
தாமிகு மெனது மனமெனும் வனத்திற்
      றனிவரல் வெருவினை யாயிற்
றழலினின் றாடிப் புலிகரி யுரிபோர்த்
      தடுத்தவாண் டுணையொடும் வருவாய்
ஈமவெள் ளெலும்பிங் கிடப்படு மெனத்தா
      னெலும்பணி கடவுண்மா நதியா
யிருந்துநல் லன்னங் கொண்டுமெய் வெளுப்ப
      விணைதபு கங்கையை யிகழ்ந்து
கீழ்மைசொல் கின்ற தொன்றுமின் றாயிற்
      கிடைக்குமோ விதன்குண மென்னக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(3)