முகப்பு தொடக்கம்

 
நேரிசையாசிரியப்பா
கோதை தாழ்ந்த கொடிநிமிர் நெடுந்தேர்ப்
          பரிதி வானவன் பரவையிற் படியக்
          கடனிறக் கமலக் கட்பெருந் திருமால்
          மார்பிடைக் குங்கும மட்டித் தாங்கு
5         குரைகடற் றுகிர்ப்பூங் கொடிபடர்ந் தென்னச்
          செக்கர்வந் தெய்தத் தன்மனந் திரிந்து
          மணந்தவர்த் தணந்த மாதர்வீழ்ந் திறப்ப
          அமைத்த வழல்கொலோ வறைதி ரென்னுஞ்
          சேண்விசும் பெழுந்த திங்க ணோக்கிக்
10        கருங்கடு வுமிழ்ந்த கடன்ம றித்தொரு
          வெண்கடு வுமிழ்ந்த தெனவுளம் வெதும்பும்
          மந்த மாருதம் வந்தழல் வீசுற
          ஆற்றா ளாகியவ் வளக்கரி னின்றெழும்
          ஊழித் தீகொலென் றுன்னியே யயரும்
15        வேய்ங்குழல் காம வெவ்வழல் கொளுவ
           ஊதுங் குழலென் றுரைத்தக நெகிழும்
          மென்மல ரமளி மேல்விழும் புரளும்
          அசைந்தெழு முயிர்க்கு மந்தோ வென்னும்
          ஒள்ளிதழ் குவித்துயிர்ப் புமிழ்ந்திடு மவிழ்ந்த
20        கருங்குழல் வாமக் கரங்கொடு செருகித்
          தனிப்பொற் றூணிற் சாய்ந்திடும் பனிநீர்
          சந்தனக் கலவை தண்ணறுங் கோதை
          தரள வடங்க டரிப்பவந் திறைஞ்சும்
          பாங்கியர்ச் சுளிந்து பறித்தவை யெறியும்
25        மழவிடை மீதில்வந்துநீ யுலாவக்
          கண்டுநின் னழகுணுங் கருங்கட் பூங்கொடி
          விரைமலர்ப் பொழில்சூழ் வெங்கை காவல
          பொன்னவிர் புரிசடைப் புனித
          மன்னவ வவணோய் மருந்துநின் புயமே.
(67)