முகப்பு தொடக்கம்

புரிசடைக் காட்டு ளாடவிட் டிளவம்
      புலியினைச் சிறப்புலி யொடுகோட்
புலிதொழ விருக்கு மொருபெருந்
      தெய்வப் புலிபனி மலையிளமானைப்
பரிவுறத் தொழுது மருவிய வதனாற்
      பயமறச் சாதிக டனது
பாங்கர்வந் தெய்தப் பெற்றதென் றறிந்து
      பசுவெலா மருவுறப் பெறுமே
சுரிகுழற் கயற்கட் பிறைநுதற் கனிவாய்த்
      துடியிடைக் குவிமுலைத் தளிர்க்கைத்
துணைவிமுற் கங்கை பெயர்சொலக் கூசுஞ்
      சுடர்மணிக் கட்செவிப் பணியான்
கிரிமகட் கெடுத்தக் கறைமிடற் றிறைவன்
      கிளக்குமெற் புகழெனத் தோன்றிக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(10)