முகப்பு தொடக்கம்

முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன்
      முக்கணாண் டகைநின தெழில்கூர்
முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந் தடியின்
      முனைப்பிறைக் கோடுகொண் டுழுது
விழுமணி யரவ நுழைசடா டவியின்
      விண்ணதித் தண்புனல் விடுப்ப
விரைவொடு குளிர்ந்து முகமலர் தலினான்
      மென்கொடி யெனநினை யுணர்ந்தேன்
செழுமணி நீல மழைமுகி றவழுஞ்
      சிலம்பெனும் புற்றினின் றூர்ந்து
திரைபொரு கடற்பேர்ப் பெரும்படம் விரித்துத்
      தினமணி யெனப்படுஞ் செங்கேழ்
கெழுமணி யுமிழ்ந்து பேரிரு டுரந்து
      கிடக்குமெய்ம் முடக்குமா சுணமாய்க்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(1)