பக்கம் எண் :

10.

    கரையில்வீண் கதையெலா முதிர்கருங் காக்கைபோல்
        கதறுவார் கள்ளுண்ட தீக்
        கந்தம் நாறிட வூத்தை காதம் நாறிட வுறு
        கடும் பொய்யிரு காதம் நாற
    வரையில்வாய் கொடுதர்க்க வாதமிடுவார் சிவ
        மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு
        மவுன மிடுவாரிவரை மூடரென வோதுறு
        வழக்குநல் வழக்கெனினும் நான்
    உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசுமவ
        ரோடுறவு பெற வருளுவாய்
        உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானுமுள்
        ளுவப்புறு குணக் குன்றமே
    தரையிலுயர் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     உயர்நிலை மகளாகிய தெய்வயானையையும் குறவர் மடமகளான வள்ளிநாயகியையும் உள்ளத்தால் விரும்புகின்ற குணக்குன்றாகிய முருகப் பெருமானே, நிலவுலகில் உயர்ந்த சென்னையிற் கந்த கோட்டத்தில் ஓங்கும் கந்த வேளே, தண்ணிய ஒளி யுடைய மணிகளுட் சைவ மணியாய்த் திகழும் சண்முகங்களை யுடைய தெய்வ மணியே, பேசப்புகின் பயனற்ற கதைகளையெல்லாம், முதிய கருங்காக்கை போலக் கதறி யுரைப்பாரும், கள்ளுண்டலாற்றோன்றும் தீநாற்றம் கமழும் வாயிலுள்ள ஊத்தை காத தூரம் நாற்றம் வீசச், சொற்களில் மிக்குள்ள பொய் இருகாத தூரம் பரவ, வரையறையின்றிப் பேசும் வாய் கொண்டு கொடிய தருக்கம் செய்வாரும், சிவமணம் கமழ்தற்குரிய மலர் போன்ற தம் அழகிய வாயின்கண் மவுனம் கொள்பவரும் ஆகிய இவர்களை மூடர் என்று உரைக்கும் வழக்கு நல்வழக்கு எனப் படுமாயினும், சொல்லுமிடத்து நான் அவர்களது உறவு கொள்ளாமல் உன்னுடைய புகழைப் பேசும் நல்லோருடன் உறவு பெறுதற்கு அருள் செய்க. எ. று.

     தெய்வ மகளிருள் உயர்ந்தவள் என்றற்கு “உயர் தெய்வயானை” என்று சிறப்பிக்கின்றார். மான் போன்றவளை “மான்” என்று கூறுகிறார். இருவர்பாலும் உள்ளொத்த அன்பு செய்து இன்புறுபவ ரென்றற்கு “உள் உவப்புறு குணக்குன்றமே” என உரைக்கின்றார். வள்ளற் பெருமான் காலத்தே சென்னை நாடோறும் உயர்ந்தமையின், “தரையில் உயர் சென்னை” என்று புகழ்கின்றார். காக்கைகள் பவலாய்த் திரண்டு கரையுமிடத்துக் கதறு குரல் தோன்றுதலால்,. கறகறத்த குரலில் பொருளில்லாத பெரும் பேச்சுப் பேசுபவரைக் “காக்கை போற் கதறுவார்” எனப் பழிக்கின்றார். கரைதல் - பேசுதல். கள்ளுண்ட ஊத்தை வாய் நாற்றம் நெடுந்தூரம் பரவுதலால் “கள்ளுண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட” என்றும், பொய்ச் சொல் பலகாதம் சென்று பரவுமென்பது பற்றி, “இருகாதம் நாற” என்றும், தகுவன தகாதன நோக்காமல் வாயில் வந்தபடி பேசுமாறு தோன்ற, “வரையில் வாய் கொடு தருக்கவாதம் இடுவார்” என்றும் இகழ்கின்றார். சிவ சிவ என்னும் நற்சொற்களை ஓதுதற்குரிய வாயால் அவற்றை ஓதா தொழிபவரை, “சிவமணம் கமழ் மலர்ப் பொன்வாய்க்கு மவுனம் இடுவார்” எனக் குறிக்கின்றார். வள்ளற் பெருமான் காலத்தில் திருவொற்றியூர்ப் பகுதியில் “வேதாந்த தர்க்க குடார தாலுதாரி” என்ற சிறப்புடைய ஒருவர் இருந்தா ரெனவும், அவர் எப்போதும் கட்குடியில் வீழ்ந்து கிடப்பாரென்றும் திரு. வி. உலகநாத முதலியார் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அக்குடிகாரரைத்தான் வள்ளற் பெருமான் நினைக்கின்றாரோ எனத் திரு. வி. க. அவர்கள் ஐயுற்றதுண்டு. மூடர் என்ற சொல்லுக்கு சொற்குறிப்புப் பொருளாக மூடுபவர் என்றும், எதிர்மறைக் குறிப்பாக மூடாதவரென்றும் சொல்லுவர். காக்கை போற் கதறுபவரையும், தர்க்கவாதம் இடுபவரையும் எதிர்மறைக் குறிப்புப் பொருள்பட மூடர் என்னும் வழக்கும் வாய்க்கு மவுனம் இடுபவரைக் குறிப்புப்பொருளில் மூடர் என்னும் வழக்கும் சேரக் கொண்டு “மூடர் என ஓதுறு வழக்கு நல்வழக்கு” என்று இயம்புகின்றார். சொல்வழக்கு நல்வழக் கென்றாலும் அவர்களது உறவு தீது பயப்பதாகலின் வேண்டேன் என்பாராய், “உரையில் அவர் தமை யுறாது உனது புகழ் பேசுமவரோடு உறவு பெற அருளுவாய்” என்று விண்ணப்பம் செய்கின்றார்.

     இதனால் ஒழுக்கமுடைய நல்லோர் உறவே பெற அருளுமாறு வேண்டிக் கொண்டவாறாம்.

     (10)