1001. நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்ணுயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
உரை: சொல்லுதற்கரிய நறுமணத்தை தேர்ந்துணரும் மூக்கே; உனக்குச் சொல்லத்தக்க தூய நன்னெறி இஃது ஒன்றேயாம்; நல்ல திருநீற்றினை யணியாத கீழ்மக்களின் உடம்பின் நாற்றத்தை நுகர வேண்டிய எல்லையை யடையின், எய்துகின்ற மூச்சினை யடக்கிக் கொள்க; நலம் பயக்கவல்ல திருநீற்றினையணிய வல்லவர்களின் அழகிய மெய்யின் மணம் பரவும் எல்லையைச் சேர்ந்தால் மகிழ்ச்சியுடன் அதனை மூக்கினால் முகர்ந்து கொள்க; அவ்வண்ணம் செய்வது தீநெறியின் நீங்கி நல்ல அருணெறியாகிய இன்பக்கடலில் மூழ்கிச் சிவபெருமானது திருவடி வாழ்வு அடைதற் பொருட்டே யாகும். எ.று.
நலமெல்லாம் தருவது திருநீறாகலின், அதனை மதித்து அணியாத கீழ்மைப் பண்பும் செயலும் உடையாரை “நாய்கள்” என்று இகழ்ந்தும், அவர்களுடைய மேனியிற் பட்ட காற்றுக் கொணரும் நாற்றமும் தீதாம் எனச் சொல்லி அஃது எய்தாவாறு விலக்குதல் விரும்பி, “நண்ணுயிர்ப்பு அடக்க” என்று வெறுத்தும் உரைக்கின்றார். துன்பம் தரும் ஆசையைக் கெடுத்துத் தவமும் ஞானமும் நல்குவது நீறென்பது பற்றி, “வல்ல நீறிடும் வல்லவர்” என்கின்றார். “பெருந்தவத் தேவர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு” என்று ஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. வல்லவர் திருமேனியில் கமழும் ஞான மணம் புன்மையைப் போக்கும் என்பது கொண்டு “எழில் மெய்வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க” என மொழிகின்றார். “போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு” எனச் சான்றோர் ஓதுப. நறுமணம் உணர்வு வடிவாய் உரைக்கப்படாத ஒண்மையுடைத்தென்பது பற்றிச் “சொல்லரும் பரிமளம்” என்கின்றார். சொல்லத்தக்க அறவுரை ஈது ஒன்றே என்றற்குச் “சொல்லும் வண்ணம் இத்தூய் நெறி ஒன்றாம்” என உரைக்கின்றார். அருட்கு மறுதலையாய மருட்செயல் வகைகளை “அல்லல்” என்றும், அவற்றின் நீங்கி எவ்வுயிர் பாலும் அருளுணர்வுடையராய்ச் சிவத்தை நினைந்தொழுகும் செவ்விய நெறி என வற்புறுத்தற்கு, “அல்லல் நீக்கி நல்அருட்கடல் ஆடிஐயர் சேவடி அடைகுதற் பொருட்டு” எனவும் உரைக்கின்றார்.
இதனால், வல்ல நீறணிதலும், அணிந்தாரொடு கூடி மகிழ்தலும் சிவபுண்ணியமென்றும், அதனால் சிவனது நல் அருட்கடல் ஆடி ஆடி அடைதல் தேற்றம் என்றும் அறிவுறுத்தவாறாம். (5)
|